பாடல் எண் :4161

தெரிந்துணரின் முப்போதுஞ் செல்கால நிகழ்காலம்
வருங்கால மானவற்றின் வழிவழியே திருத்தொண்டின்
விரும்பியவர்ச் சனைகள்சிவ வேதியர்க்கே யுரியன;வப்
பெருந்தகையார் குலப்பெருமை யாம்புகழும் பெற்றியதோ?
2
(இ-ள்) தெரிந்து உணரின் - ஆராய்ந்து உணர்ந்தால்; முப்போதும் - முன்கூறிய மூன்று காலங்களிலும்; செல்காலம்.....ஆனவற்றின் - இறப்பு - நிகழ்வு - எதிர்வு என்று மூன்றாகப் பகுக்கப்படும் எக்காலத்திலும்; வழிவழியே......உரியன - வழிவழியாகச் சிவனது அகம்படித் திருத்தொண்டில் விரும்பிய வழிபாட்டர்ச்சனைகள் சிவமறையோர்களுக்கே உரியனவாம்; அப்பெருந்தகையார்....பெற்றியதோ? - அந்தப் பெருந்தகையாளர்களின் குலத்தின் பெருமை எம்மாற் புகழப்படும் தன்மையுள் அடங்குமோ? (அடங்காது).
(வி-ரை) தெரிதல் - ஆராய்தல்; முப்போது - முன் பாட்டிற் கூறிய வழிபாட்டுக் காலங்கள்.
செல்காலம்...ஆன - செல்காலம் - சென்றகாலம் - இறந்தகாலம்; இவை காலப்பாகுபாடுகள். முன் கூறியவை நாட்கூறுபாடுகளும் வழிபாட்டுக் குரிய நேரங்களுமாம். செல்கால முதலிய மூன்றினும் என முற்றும்மை விரிக்க.
ஆனவற்றின் - உரியன - முன்காலத்திலும் உரித்தாயிருந்தன; இப்போதும் உரியன; இனியும் உரியனவாவன.
வழிவழியே - பரம்பரையாக; முன் பாட்டின் உரை பார்க்க.
வழிவழியே - சிவ வேதியர்க்கே உரியன - ஏகாரங்களுள் முன்னையது தேற்றம். பின்னையது பிரிநிலை; ஏனையமறையோர் முதலிய எவர்க்கும் உரியனவல்ல என்பதாம்; இக்கூறிய அர்ச்சனைகள் சிவாலயங்களிற் செய்யும் பரார்த்தபூசை; ஏனைய பிரமவேதியர்களாகிய சிவதீக்கை பெற்ற மகாசைவர் முதலியோர் ஆன்மார்த்த பூசைக்கு மட்டும் உரியோர். அவர்கள் பரார்த்த பூசையினை ஆசையினாலும், அதிகாரத்தானும், பிறவாற்றானும் இந்நாளிற் சில இடங்களிற் காண்பது போலக், கவர்ந்து செய்யப்புகின் நாட்டுக்கும் அரசுக்கும் கேடுபயக்கும் என்பது சிவாகமங்கள் முதலிய ஞானநூல்களின் விதி; சிவன் கோயில்கள் எல்லாம் சிவாகம விதியின் படியே அமைத்துத் தாபிக்கப்பட்டவை யாதலின் அவற்றின் வழிபாட்டர்ச்சனை முறைகளும் அவ்வாகமங்களின்படியே நிகழத்தக்கவை என்பதே நீதி.
அர்ச்சனைகள் - நித்தம், நைமித்திகம், காமியம் என்ற மூன்றும் இவற்றினங்களாகிய மூன்றும் ஆக ஆறுவகையுமாம். அர்ச்சனை - வழிபாட்டு விதிகளாகிப் பூசை ஒழுங்குகள் யாவும் என்ற பொருளில் வந்தது.
சிவ வேதியர்க்கே உரியன - பிரிநிலை ஏகாரத்தால் ஏனையோர்க்கில்லை என்பது பெற்றாம். “பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றனை யர்ச்சித்தாற், போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம், பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாமென்றே, சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானேÓ (திருமந்), “சிவன் முகத்திலே செனித்த விப்பிர சைவர், இவரே யருச்சனைக்கென் றெண்Ó, “அயன்முகத்திற் றோன்றிய வந்தணரர்ச் சித்துப் பயனடைதற் கிட்டலிங்கம் பாங்குÓ, “பாங்கில்லை தீண்டப் பாரார்த்தமிவர் தீண்டிற், றீங்குலகுக் காமென்று தேறுÓ (சைவசமய நெறி); சிவவேதியர் ஆன்மார்த்தம் பரார்த்தம் என்ற இரண்டற்கு முரியவர்கள்.
இவ்வாறு உண்மையாகவும், குலம் என்பதேயில்லை; எதுவும் எவரும் செய்யலாம்; பிறப்பால் செயலுரிமைப் பேதமில்லை; என்றிவ்வாறு கூவிப் புரட்சி புரியும் மாக்கள் இத்தத்துவங்களை உய்த்துணர்ந்து, உண்மை நெறியில் ஒழுகியும் உலகினரை ஒழுகச் செய்தும் உய்வார்களாக.
பெற்றியதோ - ஓகாரம் வினா; எதிர்மறையின்கண் வந்தது. பெற்றியதன்று என்க.
இப்பாட்டுப் பல பிரதிகளில் இல்லை.
வழிவழிசெய் - என்பதும் பாடம்.