பாடல் எண் :4164

அம்பலத்தே யுலகுய்ய வாடு மண்ண
லுவந்தாடு மஞ்சினையு மளித்த வாக்கள்
இம்பர்மிசை யநாமயமா யிருந்த போதி
லீன்றணிய கோமயமந் திரத்தி னாலேற்
றும்பர்தொழ வெழுஞ்சிவமந் திரவோ மத்தா
லுற்பவித்த சிவாங்கிதனி லுணர்வுக் கெட்டா
எம்பெருமான் கழனினைந்தங் கிட்ட தூநீ
றிதுகற்ப மென்றெடுத்திங் கேத்த லாகும்.
2
(இ-ள்) அம்பலத்தே.....ஆக்கள் - உலகம் உய்யும்படி திருவம்பலத்திலே திருக்கூத்து ஆடுகின்ற இறைவர் திருவுளமகிழ்ந்து திருமஞ்சனம் செய்தருளும் ஆனைந்தினையும் தரும் பசுக்கூட்டங்கள்; இம்பர்....போதில் - இவ்வுலகில் நோயில் லாதவையா யிருந்தபோது; ஈன்றணிய கோமயம் - கன்றீன்று அணிமையாகிய பசுவின் சாணத்தை சத்தியோசாத மந்திரத்தினால் ஏற்று; உம்பர் தொழ...சிவாங்கிதனில் - தேவர்கள் தொழும்படி மேல் ஓங்கி எழுகின்ற சிவமந்திரங்களால் உண்டாக்கப்பட்ட சிவாக்கினியில்; உணர்வுக்கு....தூநீறு - உணர்வுக்கு எட்டாத எமது பெருமானது திருவடியை நினைந்து இட்டெடுத்த தூயதிருநீறு; இது.....ஆகும் - இது கற்ப மென்று எடுத்துச் சொல்லப்படும்.
(வி-ரை) அஞ்சு - ஆனைந்து; பஞ்சகவ்வியம் என்பது வடமொழி. எண்ணலளவை யாகுபெயர்.
அநாமயம் - நோயின்மை. ந - ஆமயம் - அநாமயம்; ஆமயம் - நோய். “ஆமயந்தீர்த் தடியேனை யாளாக் கொண்டார்Ó (அரசு - அதிகை - தாண்)
ஈன்றணிய கோமயம் - கன்றீன்று அணிமையாகிய பசுவின் சாணம்; மயம் - சாணம்.
மந்திரத்தினால் - சத்தியோசாத மந்திரம் சொல்லி. ஏற்ற - ஏற்றல் - கொள்ளுதல்; எடுத்தல்; ஏந்துதல்; இது சாந்திகம், பௌட்டிகம், காமதம் என மூவகைப்படும்; சாந்திகம் - கோமயமிடும்போது பசுவின் பிற்றட்டிலே கைவைத்து ஏற்பது; பௌட்டிகம் - நிலத்தில் விழுமுன் தாமரையிலையில் ஏற்பது; காமதம் - நிலத்தில் விழுந்தபின் எடுப்பது.
சிவமந்திர வோமத்தால் - சிவாங்கி - சிவமந்திரங்களால் உளதாக்கி வளர்த்த சிவாக்கினியாகிய ஓமத்தீ.
இட்ட - தீயில் இட்டுச் சாம்பராக்கி எடுத்த. திருக்கயிலையில் இடபதேவருடன் வாழ்கின்ற நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை என்னும் ஐந்து பசுக்களின் வழியாய்ச் சிவனாணைப்படித் திருப்பாற்கடலினின்றும் இவ்வுலகில் வழிவழிவரும் பசுக்களுள், ஈன்ற பத்து நாட்குட்பட்டதும், ஈனாத கிடாரியும், நோயுடையதும், கன்று செத்ததும், கிழடும், மலடும், மலந்தின்பதும் ஆகிய இவற்றை நீக்கிச் சிறந்தனவற்றுள், பங்குனி, தை மாதங்களில் வைக்கோலை மேய்ந்த பசுச் சாணத்தை முன்கூறிய வகையால், அட்டமி, அமாவாசை - பௌர்ணமி, சதுர்த்தசி, இந்நாட்களில் சத்தியோசாத மந்திரத்தால் ஏற்று, மேலிருக்கும் வழும்பை ஒழித்து, வாமதேவத்தாற் பஞ்சகவ்வியம் விட்டு, அகோரத்தாற் பிசைந்து, தற்புருடத்தால் உருண்டை செய்து, ஈரமாகவேனும் உலர்ந்தபின்னரேனும், ஓமத்தீயினுள் ஈசானத்தால் இட்டுச் சுட்டு எடுத்த நீறு கற்பமாகும் என்பதாம்; இது சிவாகமவிதி.