பாடல் எண் :4172

உலகினி லொழுக்க மென்று முயர்பெருந் தொண்டை நாட்டு
நலமிகு சிறப்பின் மிக்க நான்மறை விளங்கு மூதூர்
குலமுதற் சீல மென்றுங் குறைவிலா மறையோர் கொள்கை
நிலவிய செல்வ மல்கி நிகழ்திரு நின்ற வூராம்.
2
(இ-ள்) உலகினில் ......நாட்டு - இந்நிலவுலகில் நல்லொழுக்கம் எக்காலத்திலும் உயர்ந்து ஓங்கும் பெருமை யுடைய தொண்டை நாட்டிலே; நலமிகு.......மூதூர் - நலம் மிக்க சிறப்புடைய நால்வேதங்களும் விளங்குதற் கிடமாகிய பழைய ஊராகும்; குலமுதல் ....திருநின்ற ஊராம் - குலத்திற்கு முதன்மையாகிய ஒழுக்கம் எந்நாளும் குறைவில்லாத மறையவர்கள் தமது கொள்கையின் நிலைநின்ற செல்வம் நிகழ்கின்ற திருநின்ற வூராகும்.
(வி-ரை) மூதுர் - திருநின்றவூராம் என்று கூட்டுக.
ஒழுக்கம் - நல்லொழுக்கம்; “தொண்டை, நன்னாடு சான்றோ ருடைத்துÓ என்பது பழமொழி. “தீய வென்பன கனவிலு நினைவிலாச் சிந்தைத், தூய மாந்தர் வார் தொண்டை நாடுÓ (1124) என்று ஆசிரியர் இந்நன்மைகளை யெல்லாம் தொகுத்துக் கூறியது இங்கு நினைவு கூர்தற்பாலது. தொண்டை நாட்டினைப்பற்றி இப்புராணத்துள் முடிந்த நிலையிற் கூறும் இடம் இதுவாகலின் இவ்வாறு இங்குத் தொகுத்துக் கூறினார்.
தொண்டை நாட்டு - மூதூர் என்க. நான்மறை விளங்கும் - இப்புராண முடைய நாயனாரது மரபுபற்றி இத்தன்மையினை விதந்து கூறினார்.
குலமுதற்சீலம் என்பது “பார்ப்பான் பிறப்பொழுக்கம்Ó (குறள்).
கொள்கை நிலவிய செல்வம் - கொள்கை என்பது உயிரின் மேம்பாடு பற்றிய குறிக்கோள்; நிலவுதல் - அக்குறிக்கோளிற் பிறழாத முயற்சியுடைமை; இந்நாயனாரது வரலாற்றின் வைத்துக்காண்க.
நிலவிய செல்வம் மல்கி நிகழ் - என்றது திருநின்ற என்ற ஊர்ப்பெயரின் காரணப்பொருள் பற்றி விளக்கியவாறு; “திருவாமூர்Ó (1277) முதலியவை போலக் காண்க; இது தின்னனூர் என வழங்குகின்றது (இரயில்பாதை நிலையம்).
என்னும் - விளக்கு- என்பனவும் பாடங்கள்.