பாடல் எண் :4175

மனத்தினாற் கருதி யெங்கு மாநிதி வருந்தித் தேடி
எனைத்துமோர் பொருட்பே றின்றி “யென்செய்கேÓ னென்று நைவார்
நினைப்பினா லெடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதிய மெல்லாந்
தினைத்துணை முதலாத் தேடிச் சிந்தையாற் றிரட்டிக் கொண்டார்.
5
(இ-ள்) மனத்தினால்......தேடி - பொருள் தேடிப்பெறும் இடங்களை மனத்தினால் கருதி எங்கும் பெருநிதியினை வருந்தித் தேடியும்; எனைத்தும்.....நைவார் - எவ்வாறாயினும் ஒரு சிறிதும் பொருளைப் பெறும் நிலை கிட்டாமல் “இனி என் செய்வேன்Ó என்று வருந்துவாராகி; நினைப்பினால் எடுக்க நேர்ந்து - நினைவினாலே கோயில் எடுப்பதனைத் துணிந்துகொண்டு; நிகழ்வுறும்...திரட்டிக் கொண்டார் - செயல் நிகழ்வதற்குற்ற நிதியங்களைக் எல்லாம் தினை அளவுள்ள சிறிது சிறிது அளவாகத் தேடி மனத்தினாற் சேர்த்துக் கொண்டனர்.
(வி-ரை) மனத்தினாற் கருதி - பொருள் பெறும் இடங்களையும் வகைகளையும் மனத்திற்றேர்ந்துகொண்டு; தேடி - தேடியும்; எனைத்தும் - எவ்வாற்றானும்; ஓர் - ஒரு சிறிதும்; பொருட்பேறு - பொருள் பெறும் நிலை. நைவார் - நைதல் - மனம் மிக வருந்துதல். நேர்ந்து - துணிவு பூண்டு. தினைத்துணை - தினையின் அளவு; முதலான - சிறிது சிறு அளவாக. “தினைத்துணை யுள்ளளோர் பூவினிற்றேன்Ó (திருவா). “தினைத்த னைப்பொழுது தும்மறந் துய்வனோ Ó (அரசு); தினை (பனை) என்பன சிறுமை பெருமைகட்கு எடுத்துக் காட்டும் அளவு (பரிமே); நாயனாரின் முயற்சியின் பெரிய அளவு காட்டத் “தினைத்துணை முதலாÓ என்றார்.
திரட்டி - ஒன்று சேர்த்து; வேண்டும் நிதியம் முற்றும் சேகரித்துக் கூட்டி.
மனத்தினாற் - தேடி - நைவார் - பொருள் வளமில்லாதார் பணி செய்யப் புகின் உலகம் ஆதரிக்காது வருந்தச் செய்யும் என்னுமியற்கை குறித்தது. ஏன்? பொருள் வளமுள்ளார் தேடினும் உலகர் பணம் மனமுவந்து சிவன் பணிக்குதவ முன்வராதது கண்கூடன்றோ? நைவார் - நைவாராகி; முற்றெச்சம்; நைவாராகிய நாயனார் என்று வினைப்பெயராக வுரைப்பினுமாம்.
மனத்தினாற் றிரட்டிக் கொண்டு - செல்வம் திரட்டுதல் மனத்தின் றொழிலிற் றொடங்கும். அது முற்றினால் புறச் செல்வம் விளையும், ஈண்டு நாயனார் அகச் செல்வமே ஆணிவேர் என்பதனை உணர்ந்து அதனைத் தேடி அமைத்தார். அகத்தொழிலே வினைவிளைவுக்குக் காரணமாகும் தன்மை திருமலைச் சிறப்பிற் காண்க.