பாடல் எண் :4198

அப்பூங் கானில் வெண்ணாவ லதன்கீழ் முன்னா ளரிதேடும்
மெய்ப்பூங் கழலார் வெளிப்படலு மிக்க தவத்தோர் வெள்ளானை
கைப்பூம் புனலு முகந்தாட்டிக் கமழ்பூங் கொத்து மணிந்திறைஞ்சி
மைப்பூங் குவளைக் களத்தாரை நாளும் வழிபட் டொழுகுமால்.
2
(இ-ள்) அப்பூங்....வெளிப்படலும் - அந்தப் பூங்கானிலே வெண்ணாவல் மரத்தினடியிலே, முற்காலத்தில் விட்டுணுதேடிய உண்மையுருவாகிய பூப்போன்ற திருவடி யுடைய இறைவர் வெளிப்பட்டருள; மிக்க........இறைஞ்சி - மிகுந்த தவத்தினையுடைய ஒரு வெள்ளையாளை கையினாலே அழகிய நீரை முகந்து திருமஞ்சன மாட்டி மணமுடைய பூங்கொத்துக்களையும் இறைவரது திருமேனியிலணிந்து வணங்கிக், கரிய குவளைபோன்ற கழுத்தினையுடைய இறைவரை நாடோறும் வழிபட்டு ஒழுகி வந்தது. (வி-ரை) அப்பூங்கான் - முன்கூறிய அந்த மலர் வனம் என்று அகரம் முன்னறிசுட்டு.
வெண்ணாவல் ;- “ஞானச் சார்வாம் வெண்ணாவல்Ó (4209); இத்தலத்துள் வெண்ணாவல் வனத்துத் தவம்புரிந்த சம்புமுனிவர் ஒருநாள் தாம் முன் கண்டறியாத அதி தெய்விகமாகிய ஒரு வெண்ணாவற் கனி தம்முன் விழ, அதனைத் திருக்கயிலையில் இறைவருக்கு ஊட்டி எஞ்சிய அதன் விதையைத் தாம் உண்ண, உடனே அது முளைத்துச் சிரத்தின் வழியே வெளிப்பட்டு எழுந்து - வேதங்கள் - வேர்; உபநிடதங்கள் -அடிமரம்; ஆகமங்கள் - கிளைகள்; சரியை கிரியை யோகம் - கிளை சிறுகிளை - பூங்கொத்து; ஐவகை ஞானங்கள் அரும்பு மலர் காய்கள் இரதம் - என இவ்வாறு தழைத்து வானளாவ உயர்ந்து எவர்க்கும் மலபரிபாகம் தந்துவிளங்கக் கண்டு முனிவர் வியந்து, பெருமானைப் பிரார்த்தித்து அவர் அருளியவாறே இத்தலத்தெல்லையில் அம் மரத்தினடியில் தவம் புரிந்து இருக்கின்றனர். இதனடியில் இறைவரும் வெளிப்பட் டெழுந்தருளி யிருக்கின்றனர் என்பது தலமான்மிய வரலாறு.
அரிதேடும்........வெளிப்படலும் - தற்போதத்தால் தாம் காண்போம் என்பார்க்கு அரியவர்; அன்புடைய அடியவர்க்காகத் தாமே வெளிப்பட்டருளுவர் என்பது. வெளிப்படலும் - சிவலிங்கக்குறி காண்டலும்; தானே முளைத்தவர் என்பார் வெளிப்படலும் எனறார்.
மிக்க தவத்தோர் வெள்ளானை - முன்னைப் பெருந்தவப் பேறுடையது ஒரு சாபத்தால் வெள்ளானையாய் வந்தது என்பது வரலாறு; ஓர் - இஃது, இந்திரனது யானையன்று; வேறொன்று என்பது.
வெள்ளானை - வழிபட்டொழுகுமால் - யானை வழிபட்ட நிலைகள்பற்றித் தேவாரத் திருவாக்குக்களுள்ளும் போற்றப்படுதல் காண்க. “பிடியெல்லாம் பின்செலப் பெருங்கைமா மலர்தமீஇ, விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடும்Ó (பிள் - தேகானப் பேர் - கொல்லி -7); “அடைந்தயிரா வதம்பணிய, மிக்கதனுக் கருள் சுரக்கும் வெண்காடும் Ó (மேற்படி வெண்காடு. சீகாமரம் - 7 ) என்பன முதலியவை காண்க. கை - துதிக்கையினால்; குவளை - கருங்குவளை; நீலமலர்; நீலோற்பலம். மை - கரிய; பூ - பூவாகிய; அழகிய என்றலுமாம்.
திருக்கயிலையில் சிவகணத்தவர்களுள் மாலியவான், புட்பதந்தன் என்ற இருவர் தம்முள் ஒருவரினொருவர் சிவன்றிருத்தொண்டில் சிறந்தவராய்ப், பொறாமையும் சினமும் மேலிட்டு, மாலியவான் புட்பதந்தனை யானையாகுக எனச்சபிக்க, அவன் மாலியவானைச் சிலந்தியாகுக எனச் சபிக்க, இருவரும் இறைவராணையின் வழியே இத்தலத்து யானையும் சிலந்தியுமாக வந்து சிவன் பணியிலே இகலி இறந்து பேறு பெற்றனர் என்பது தலமான்மிய வரலாறு; மேல் ஆசிரியர் விரித்தலும் காண்க; முன்னைநிலையிற் றவமுடைய சிவகணத்தவருள் ஒருவராயிருந்த நிலையினை மிக்க தவத்தோர் என்றார். இது போலவே மற்றையவரையும் ஞானமுடைய வொருசிலந்தி (4199) என்று முன்னைக் குறிப்புப் பெறக் கூறினார். இவ்வாறு குறிப்பினாலன்றி முன்னை நிலைகளை வெளிப்பட உணர்த்துதல் ஆசிரியர் மரபன்று. ஆனால் இந்நாயனாரது சரிதத் தொடர்பு கூறவேண்டியது அவசியமாதலின் சிலந்தியே சோழ ராயினர் என்று அவர்தம் முன்னைநிலையை குறித்தார் என்க. அதற்குமேல் அச் சிலந்தியின் முன்னைநிலை கூறவேண்டியது அவசிய மில்லா மையினையும் உணர்க. நாளும் - ஒவ்வொருநாளும்; நாணாளும்.