பாடல் எண் :4206

“பிறவா தொருநா ழிகைகழித்தென் பிள்ளை பிறக்கும் பரிசென்கால்
உறவார்த் தெடுத்துத் தூக்குÓ மென, வுற்ற செயன்மற் றதுமுற்றி
யறவா ணர்கள்சொல் லியகால மணையப், பிணிவிட் டருமணியை
இறவா தொழிவாள் பெற்றெடுத் “தென்கோச்செங்கண்ணா னோ?Ó வெண்றாள்.
10
(இ-ள்) பிறவாது.......என - (இப்போது) பிறவாது ஒரு நாழிகை கழித்து என்பிள்ளை பிறக்கும்படி எனது கால்களைப் பொருந்தக் கட்டித் தூக்குங்கள் என்று சொல்ல; உற்ற செயல்மற்றது முற்றி - பொருந்திய அச்செய்கை நிறைவு பெற்று; அறவாணர்கள்......அணைய - சோதிடர்கள் சொல்லிய அக்கால எல்லைசார; பிணிவிட்டு.....எடுத்து - கட்டவிழ்ந்து விடுவிக்க, இறவாதுள்ள அக்கமலவதி அரிய மணிபோன்ற குழந்தையைப்பெற்றுக் கையில் எடுத்து; என்.....என்றாள் - இவன் எனது செல்வக்கோச் செங்கண்ணானோ? என்று பாராட்டினாள்.
(வி-ரை) பிறவாது மகவுபெற அடுத்தவேளை இப்போதுவரினும், இப்போது பிறவாமல்.
“என்கால்......தூக்கும்Ó என - கால்களைக்கட்டி மேலேதூக்கி நிறுவுக என்று சொல்ல; கால்களை மேனோக்கித் தூக்கிக்கட்டி நிறுத்தலால் நிலம்நோக்கி விழும் குழவியின் வெளிப்பாடு நிகழ இயலாது தாழ்த்தல் கருத்து.
உற்ற செயல் அது - முற்றி - அவ்வாறே செய்யலுற; அச்செயலைச் செய்தனர் என்று தானும் கூறத் தரியாது ஆசிரியர் உற்ற செயல் அது முற்றி என்றருளினர்; இஃதவர் மரபு. முற்றி - அணைய - என்று கூட்டுக.
அறவாணர்கள் - சோதிடர்கள்; அறநூல் விதிப்படி காலக் கணித நிலைகளால் கோள்களின் பலன்பற்றி அறிந்துகூறி மக்களை அறவழி நிறுத்தும் துணைவர்களாதலின் அறவாணர் எனப்பட்டனர். “ஓதுங்க ணான்மறை யுத்தமரேÓ (திருக்கோவை).
பிணிவிட்டு - பிணி - காலைப்பிணித்து மேல் ஏற நிறுவியநிலை; விட்டு - கட்டு நீக்கிய யியல்பிற் கீழே விட்ட அதனால்; விட்டு - விடப்பட்டதனால்; விடுவிக்க என்னும் பிறவினை யெச்சம் விட்டு எனத் தன்வினை யெச்சமாய் திரிந்து நின்றது.
இறவா தொழிவாள் - அன்று பிள்ளைபிறந்த சின்னேரத்துள் இறப்பவளாயினும் கோச்செங்கண்ணாரின் தாய் என்ற புகழால் என்றும் இறவாதிருப்பவள்; கால்மேலே தூக்கி நிறுவிய நிலையிலும் குறித்தகால எல்லையளவும் சாவாமல் இருந்தவள் என்றுரைத்தனர் முன்னுரைகாரர்கள்.ஒழிவாள் - இறவாது பெற்றெடுக்க - என்று கூட்டி யுரைப்பாரு முண்டு. ஒழிவாள் - உடன் விரைவில் இறப்பவள். மணி முத்து முதலியவை வெளிப்பட்டவுடன் அவற்றின் ஆதாரப் பொருள்கள் அழிவுறுந் தன்மையும் காண்க.
அருமணி - மணிபோன்ற மகன்; “வலம்புரி முத்தின்Ó என்பது திருவானைக்காப் புராணம். மணி - மகவுக்கு உவமையாகுபெயர்.
என் கோச்செங்கண்ணானோ? - பிள்ளை பிறக்கும் நேரம் கழித்து ஒருநாழிகை யளவும் பிறவாமல் ஒடுக்கிவைத்தமையின் குழவியின் கண் சிவந்திருந்தமை நோக்கித்தாயார் இவ்வாறு பெயரிட்டழைத்தனள் என்க. அன்னையார் அன்பு மேலிட்டழைத்த அதுவே பெயராய் வழங்கலாயிற்று; சோதிடர் சொல்லக்கேட்டுச் சோழன் என்செய்வோம் என மயங்கியபோது, தேவி தமதுகாலை ஆர்த்துத் தலைகீழாகத் தூக்கிக் கட்டும்படி சொல்ல அதன்படி செய்தனர் என்று திருவானைக்காப் புராணமுடையார் இதனை விரித்துரைத்தனர். 4203 - 4204 இந்த இரண்ட பாட்டுக்களின் தொடர்பின்றியே சரிதம் பொருளும் யாப்பும் தொடர்ந்து செல்லுதல் ஈண்டுக் கருதத்தக்கன.