பாடல் எண் :4215

எருக்கத்தம் புலியூர் மன்னி வாழ்பவ ரிறைவன் றன்சீர்
திருத்தகும் யாழி லிட்டுப் பரவுவார் செழுஞ்சோ ணாட்டில்
விருப்புறு தான மெல்லாம் பணிந்துபோய் விளங்கு கூடற்
பருப்பதச் சிலையார் மன்னு மாலவாய் பணியச் சென்றார்.
1
(இ-ள்) எருக்கத்தம்புலியூர் மன்னிவாழ்பவர் - திருஎருக் தத்தம்புலியூரில் நிலைபெற்று வாழ்பவர் (திருநீலகண்ட யாழ்ப்பாணர்); இறைவன்றன்.....பரவுவார் -அவர் இறைவரது சீர்களைச் சிறப்புடைய தகுந்த யாழில் அமைத்துப் போற்றுபவர்; செழும்.....போய் - செழிப்புடைய சோழநாட்டிலே விருப்பமிக்க பதிகளில் எல்லாம் வணங்கிப்போய்; விளங்கு.....சென்றார் - விளக்க முடைய திருநான்மாடக்கூடல் என்னும் மதுரையில் மலைவில்லேந்திய இறைவர் நிலைபெற எழுந்தருளியுள்ள திருவாலவாயினைப் பணிவதற்குச் சென்றனர்.
(வி-ரை) வாழ்பவர் - பரவுவார் - சென்றார் - என்று கூட்டிக்கொள்க. இவற்றுக்குத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்ற எழுவாய் அவாய்நிலையால் வருவித்துரைத்துக் கொள்க. முன்னமே ஆளுடைய பிள்ளையார் புராணத்துள் (2029 - 2039; 2075 - 2077) இவரது வரலாறுகள் தொடங்கிக் கூறியருளியபடியால், இங்குச் சரித வரலாற்றுக்குரிய நாடுநகர முதலிய தொடக்க நிலைகள் ஒன்றும் கூறாது, தொடங்கினார். இவ்வாறே அப்பூதி நாயனார் புராணத் தொடக்க அமைப்பும், ஆண்டுரைத்தவையும் காண்க.
இறைவன்.......பரவுவார் - பண்பும் அன்பும் கூறியபடி; பரவுவார் - பரவும் தன்மையுடையவர் என்று பண்பு குறித்தது.
சோணாட்டில்...போய் - நடுநாட்டிலிருந்து பாண்டியநாடு நோக்கிச் செல்பவர் இடையில் சோழநாடு கடந்து செல்லவேண்டும்; அவ்வாறு செல்லும் வழியில் நேர்பட்ட பதிகளில் தாம் விரும்பிய பதிகளிலெங்கும் வழிபட்டு மேற்சென்றனர் என்பதாம்.
இவ்வாறு பாணனார் சோழநாட்டுப் பதிகளை வணங்கி, மதுரையினைப் பணிந்து, மீண்டு திருவாரூரில் வந்து வணங்கிச், சீகாழியினைச் சார்கின்றவரையில் உள்ளது அவரது சரிதத்தின் முற்பகுதி; இதுவே இப்புராணப் பகுதியில் விரித்துப் பேசப்படுவது. சீகாழியில் வந்தபின்னர் ஆளுடைய பிள்ளையாரது அருள் பெற்றபின்பு அவருடனேகூட அமர்ந்திருந்து அவர்தம் திருமணத்தில் இறைவரது திருவடி சேர்ந்த வகையில் உள்ளது அவரது சரிதத்தின் பிற்பகுதி; அதனைப் பிள்ளையாரது சரிதத்துடன் சார்த்தி முன்பே விரித்துரைத்தனராதலின் அதனை அம்முறையே ஈண்டு ஒரேபாட்டினாற் (4225) சுருக்கிச் சுட்டிக்கூறியும், முற்பகுதியினைப் (4215 - 4224) பத்துப்பாட்டுக்களால் விரித்துக் கூறியும் அருளிய அமைப்புக் கண்டுகொள்க. இவ்வாறே புகழ்ச்சோழரது யானைபற்றிய வரலாற்றினை எறிபத்த நாயனார் புராணத் தொடர்புடைமை பற்றி முன்னமே 43 பாட்டுக்களால் விரித்துக்கூறிய (561 - 603) ஆசிரியர், அதனை அவர்தம் புராணத்துள் வரும் முறையே ஒரு பாட்டினாற் (3956) சுருக்கிக்கூறிய அமைதியும் ஈண்டு வைத்துக் கருதற்பாலது.
மன்னி வாழ்பவர் - அவதரித்து நிலையான குடியிருப்பு வாழ்வுடையவர்.
இறைவன்றன் சீர்திருத்தகும் யாழிலிட்டு - சீர் - சீரை ஏத்தும் பாடல்களுக்காகி வந்தது; திருத்தகும் - இறைவன் சீர்ப்பாடலிசைகளே யாழிலிடத்தக்கன; அழிவுடைய ஏனைய போலி யிசைகளை இடுதல் தகாது என்பார் திருத்தகும் என்பார். பாணனாரது யாழ் இறைவரது சீர்களை இசைத்தற்கே பயன்பட்டது; இவ்வாறு முன்னர்ப் பண்பட்ட தவத்தாலே பிற்றை நாளில் பிள்ளையாரது பதிகங்களை அவர் அருளிய ஆங்காங்கும் யாழிலிடப் பயன்படும். மேலும் அதுகொண்டு வீடுபெறும் பேறும்பெற்றது; திருத்தகும் என்றது அக்குறிப்பும் தருவதாம். இங்குக் குறித்தது யாழ்வகை நான்கனுட் பாணனார் கொண்ட சகோடயாழ்; இது 16 நரம்புகளையுடையது. ஏனை மூன்று யாழாவன - பேரியாழ், மகரியாழ், செங்கோட்டியாழ், என்பன. இவைமுறையே 21 - 17 - 7 நரம்புகளையுடையன யாழ் வாசிக்கும்முறை “நல்லிசை மடந்தை நல்லெழில் காட்டி, யல்லியம் பங்கயத் தயனினிது படைத்த, தெய்வஞ் சான்ற தீஞ்சுவை நல்லியாழ், மெய்பெற வணங்கி மேலொடுகீழ் புணர்த்து, இருகையின் வாங்கி யிடவயி னிரீஇ, மருவி யவிநய மாட்டுதல் கடனேÓஎன்பதனானறிக.
விளங்குகூடல் - இறைவரருள் தரவிளங்க வீற்றிருக்கும் பதி என்பதாம்.
ஆலவாய் - கோயிலின் பெயர்.