பாடல் எண் :4243

சென்ற சென்ற குடபுலத்துச் சிவனா ரடியார் பதிகடொறு
நன்று மகிழ்வுற் றின்புற்று நலஞ்சேர் தலமுங் கானகமுந்
துன்று மணிநீர்க் கான்யாறுந் துறுகற் சுரமுங் கடந்தருளிக்
குன்ற வளநாட் டகம்புகுந்தார் குலவு மடியே னகம்புகுந்தார்.
15
(இ-ள்) குலவும்.....அகம்புகுந்தார் - அடியேனுடைய விளங்கிய உள்ளத்திற் குடிபுகுந்தவராகிய நம்பிகள்; சென்ற....இன்புற்று - மேற்றிசையில் உள்ள நாட்டில் போயின அங்கங்கும் சிவனாரடியார் பதிகள்தோறும் மிகவும் மகிழ்ந்து இன்பம் அடைந்து; நலம்........கடந்தருளி - நன்மை பொருந்திய தலங்களையும், காடுகளையும், நிரம்பிய மணிகளையுடை நீர் பொருந்திய கான்யாறுகளையும், துறுகற்சுரங்களையும் கடந்து சென்றருளி; குன்ற....வளநாட்டகம் புகுந்தார் - வளமுடைய மலைநாட்டினுட் புகுந்தருளினர்.
(வி-ரை) சென்ற சென்ற குடபுலம் - மேற்றிசைத் தேயத்தில் நம்பிகள் போயின அங்கங்கும்; இவை மலைநாடு சாரும்வரை இடைப்பட்ட கொங்கு நாட்டுப் பகுதிகள்.
சிவனார்....இன்புற்று....கடந்தருளி - சிவனடியார்கள் இருக்கும் பதிதோறும் நம்பிகளை வரவேற்று உபசரித்துக் குறைவறுத்தமையால் மகிழ்ந்து. “கொங்கர் நாடு கடந்தருளிÓ (3797); “சென்ற திசையிற் சிவனடியார் சிறப்பினோடு மெதிர்கொள்ளக், குன்றுங் கானு முடைக்குறும்ப ரிடங்க டோறுங் குறைவறுப்பத், துன்று முரம்புங் கான்யாறுந் துறுகற் சுரமும் பலகடந்தÓ (3798) என்று சேரனாரது யாத்திரைக் குரைத்தவை இங்கு நினைகூர்தற்பாலன.
நலஞ்சேர் தலம் - இடைப்பட்ட நிலவெளியிற் காணும் நல்ல தனி நகரங்கள்; நலஞ்சேர் என்றது அந்நாட்டுப் பகுதிகளுள் அந்நாளில் அங்கங்கும் சில தனி நகரங்களன்றி ஏனையவை நலம் பொருந்தாதன என்ற நிலைக்குறிப்பு.
மணிதுன்று நீர் - மலைகள் குன்றுகளிலிருந்து மணிகளை வரன்றி அலைத்துக் கொண்டுவரும் நீர். அழகிய நீர் என்றலுமாம்; “மணிநீரு மண்ணும்Ó (குறள்).
கான்யாறு - இந்நாட்டுப் பகுதிகளின் இயற்கை யமைப்புக் குறித்தது.
துறுகற்சுரம் - துறுத்தல் - மேற்செல்ல வொட்டாது துன்புறுத்துதல்; கற்சுரம் - கற்கள் பொருந்திய கானங்கள்;இவை நோய்க்கிடமாயுள்ளவை என்பது சுரம் என்ற சொற்சிலேடையாற் குறிப்பிட்டது கவிநயம்.
குன்ற - வள- நாடு என்றமையால் முன் கடந்து போந்த நாட்டுப் பகுதிகள் அத்துணை வளமில்லாதன என்பது குறிப்பு; நலமல்லாதவற்றை வெளிப்படக் கூறாது, குறிப்பிற் காட்டும் உயர் கவிமரபு பற்றியது. புகுந்தார் - வினைமுற்று.
குலவுமடியே னகம்புகுந்தார் - புகுந்தார் - வினைப்பெயர்; புகுந்தாராகிய நம்பிகள்; இவ்வாறு குறித்தது மலைநாட்டு இவ்யாத்திரையுடன் நம்பிகளது இந்நிலவுலக யாத்திரைகள் நிறைவுபெற்று இனிக் கயிலைக்குச் செல்லுநிலை வருதலால், அவரது வரலாறு கூறவந்த நிலை முற்றுப் பெறுமிடத்து வணக்கம் செய்யும் மரபுக்குறிப்பு, அடியேனது வலிய வறிய கற்போன்ற அகத்தினும் புகுந்த அவருக்கு, அதனை நோக்க மெல்லிய கல் நிறைந்த வளமுள்ள குன்ற நாட்டிற் புகுதல் எளிது என்றதொரு குறிப்பும் கண்டு கொள்க; மேல் வரும் கல்லில் நடக்கப் பழகிக் கொள்ள எனது கல்மனத்தைக் கருவியாக்கிக் கொண்டு எனக்கும் ஓர் அருளிப்பாடு செய்தது அவரது பெருமை என்பதும் குறிப்பு. “வரையின்பாற் குஞ்சரி நடந்தசெயல் கூறுபுது மைத்தோ?...செம்மலடி தீயே னெஞ்சக வடுக்கலினு நின்றுலவு மென்றால்Ó (தெய் - திருமணப் - 231) என்ற கந்த புராணம் காண்க. குலவும் - விளங்கும்; விளக்கமாவது நம்பிகளை வணங்கும் வாய்ப்புடையதன்மை; அகம் - இரண்டனுள் முன்னையது ஏழனுருபு; பின்னையது மனம்; சொற்பின் வருநிலை.