பாடல் எண் :4244

“முன்னாண் முதலை வாய்ப்புக்க மைந்தன் முன்போல் வரமீட்டுத்
தென்னா ரூர ரெழுந்தருளா நின்றாÓ ரென்று சேரர்பிரார்க்
கந்நாட் டரனா ரடியார்கண் முன்னே யோடி யறிவிப்பப்
பொன்னார் கிழியு மணிப்பூணுங் காசுந் தூசும் பொழிந்தளித்தார்.
16
(இ-ள்) முன்னாள்.....என்று - முன்னாளிலே முதலையின் வாயில் விழுங்கப்பட்ட மைந்தனை முன்போல உயிர்பெற்று வர மீட்டுக் கொடுத்துத் தென்னாரூர் நம்பிகள் எழுந்தருளி வருகின்றார் என்று; சோர்பிரார்க்கு.....அறிவிப்ப - அந்நாட்டில் உள்ள சிவனடியார்கள் முன்னாக ஓடிச் சென்று சேர் பெருமானாருக்கு அறிவிக்கவே; பொன்னும்....அளித்தார் - அறிவித்தவர்களுக் கெல்லாம் பொற்கிழியும் மணிப்பூண்களும் காசும் துணியும் மழைபோல மிகுதியாக அளித்தனர் (சேரனார்).
(வி-ரை) அரனாரடியார்கள்.......அறிவிப்ப - நம்பிகள் எழுந்தருள்வது பெரிய நல்ல சிவச் செய்தி யாதலின் அடியார்கள் அதனை அரசனுக்கு முன்னாக ஓடி அறிவித்தனர்; அந்நாள் அரசரியல்பும் அடியாரியல்பும் அன்பினொழுக்கமும் குறித்தவாறு.
தென்ஆருர் - தென் - ஆரூர் - திரு ஆரூர் உள்ள பகுதி - “தென் திருவாரூர் புக்கு,.....என்று கொலெய்துவதேÓ (நம்பி - தேவா).
பொன்னார்கிழியும்.......அளித்தார் - அறிவித்த செய்தியின் பெருமையும் நன்மையும் பற்றி மகிழ்ந்த நிலை. பொழிதல் - மழைபோல மிகுதி பெறக் கொடுத்தல்; மேல் வரும் பாட்டுப் பார்க்க. தூசு - சிறந்த உடை.