பாடல் எண் :4251

ஆரண மொழிகள் முழங்கிட ஆடினர் குணலைக ளந்தணர்
வாரண மதமழை சிந்தின வாசிகள் கிளரொளி பொங்கின
பூரண கலச மலிந்தன பூமழை மகளிர் பொழிந்திடுந்
தோரண மறுகு புகுந்தது தோழர்க ணடவிய குஞ்சரம்.
23
(இ-ள்) ஆரண....அந்தணர் - வேதப்பதங்களைச் சொல்லுமி ஒலி முழங்கியிட வேதியர்கள் குணலைக்கூத் தாடினார்கள்; வாரண.....சிந்தின - யானைகள் மழைபோல மதநீர் சொரிந்தன; வாசிகள்...பொங்கின - குதிரைகள் கிளர்ச்சியின் ஒளிகள் வீசின; பூரண...மலிந்தன - நிறை குடங்கள் எங்கும் மலிந்திருந்தன; பூ...குஞ்சரம் - மங்கலப் பெண்கள் பொழியும் பூமழை சிந்துகின்ற தோரண நிறைந்த வீதியினுள்ளே தோழர்கள் ஊர்ந்த யானை புகுந்தது.
(வி-ரை) ஆரண....அந்தணர் - வேதியர்கள் வேதியர்களை வேதங்களை முழக்கிக் குணலைக் கூத்தாடினர்; குணலை - கைதட்டி ஆரவாரித்து ஆடும் ஒருவகைக் கூத்து, ஆனந்த மிகுதியால் வருவது. “கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியேÓ (சித்தி).
வாரணம் - வாசிகள் - சேனை வந்தமையால் யானைகளும் குதிரைகளும் நிரம்பியிருந்த நிலை குறித்தது.
பூரணகலசம் - நீர் நிறை குடம்; மங்கலப் பொருள்களுள் ஒன்று.
தோழர்கள் - சேரலனாரும் நம்பிகளும்; நடவிய - நடத்தி ஏவிய; ஊர்ந்த.
மறுகு - வீதி. கடவிய - என்பதும் பாடம்.
இப்பாட்டு முதல் 4 பாட்டுக்களும் எதிர்கொள் மகிழ்ச்சிக்கேற்ற சந்தயாப்பிலமைந்த யாப்பு அமைதியும் கவிநயமும் கண்டுகொள்க.