பாடல் எண் :4256

ஆய செய்கையி னாள்பல கழிந்தபி னரசர்கண் முதற்சேரர்
தூய மஞ்சனத் தொழிலினிற் றொடங்கிடத் துணைவராம் வன்றொண்டர்
பாய கங்கைசூழ் நெடஞ்சடைப் பரமரைப் பண்டுதாம் பிரிந்தெய்துஞ்
சேய நன்னெறி குறுகிடக் குறுகினார் திருவஞ்சைக் களந்தன்னில்.
28
(இ-ள்) ஆய...பின் - முன் கூறியவாறு ஆகிய செயலிலே பல நாட்கள் கழிந்தபின் (ஒரு நாள்); அரசர்கள்......தொடங்கி - (முடியுடை மூவேந்தர்களுள்) முதலில் வைத்தெண்ணப்படும் சேரலனார் தூய திருமஞ்சனம் செய்தருளும் தொழிலில் தொடங்கியிட; துணைவராம் வன்றொண்டர் - அரவது தோழனாராகிய வன்றொண்டர்; பாய...குறுகிட - பரவிய கங்கையினைச் சூழ்ந்து முடித்த நீண்ட சடையினையுடைய சிவபெருமானை முன்னை நிலையிற் றாம் பிரிந்து போந்து இவ்வுலகில் வந்த தூரமாகிய நல்ல நெறியானது முடியும் எல்லை வர; திருவஞ்சைக்களந்தன்னிற் குறுகினார் - திருவஞ்சைக்களத்தில் அணைந்தனர்.
(வி-ரை) ஆய - முன் பாட்டிற் கூறியவாறு ஆகிய; ஆய - ஆக்கமுடைய என்ற குறிப்புமாம்.
கழிந்த பின் - கழிந்த பின்னர் ஒருநாள்; ஒருநாள் என்பது இசையெச்சம்.
அரசர்கள் முதற் சேரர் - மூவேந்தர்களை எண்ணும்போது சேர சோழ பாண்டியர் என்று முறைப்படுத்தி முதலிற் சொல்லவரும் சேரர்; இவ்வாறன்றி அரசர் களுள் மேம்பட்ட என்றலுமாம்.
மஞ்சனத் தொழில் - நீராடும் செயல்.
மஞ்சனத் தொழில் தொடங்கிட வன்றொண்டர் - திருவஞ்சைக்களத்தன்னில் - குறுகினார் - என்க; பதிவழிபாட்டு நிலைகளின்போது முன்னரெல்லாம் சேரனார் உடன் இருக்க நின்றது கண்டும், நம்பிகள், அன்று அவரைப் பிரிந்து, அவர் திருமஞ்சனத் தொழில் தொடங்கிடும்போதே தாம் தனித்துத் திருவஞ்சைக்களத்திற் சென்றருளினர். அதன் காரணம் என்னையோ? என வரும் ஐயப் பாட்டினை நீக்குதற்குப் “பரமரைப் பண்டுதாம் பிரிந்தெய்துஞ், சேய நன்னெறி குறுகிடÓ என்றருளி, அதன் மேல் திருவஞ்சைக்களஞ் சார்தலைக் கூறுகின்ற அருட் கவிநயம் காண்க. இறைவரைத் தாம் பிரிந்து போந்த நிலை நீங்கிச் செல்கின்ற காலம் அணித்தாயினமையால் இவ்வாறு தமது தோழனாரைப் பிரிந்து போந்தனர் என்பது.
மஞ்சனத் தொழில் - நீராடுதல்; பெரியோர்கள் அரசர்கள் முதலாயினவர் நீராடுதலை இவ்வாறு கூறுதல் மரபு; பெருமடங்களில் இன்றும், இவ்வழக்குக் காணலாம்; இறைவரது திருமுழுக்கினைத் திருமஞ்சனம் என்றும், திருமுழுக்குக்குரிய நீரினைத் திருமஞ்சன நீர் என்றும் கூறும் மரபு இன்றியமையாத வழக்கு; மற்றும் பெரியோர்களைப் பற்றிக் கூறுதல் இறைவரோடொப்ப எண்ணும் முறை பற்றிய உபசார வழக்கு.
துணைவராம் - வன்றொண்டர் - குறுகிடக் குறுகினார் - இணைபிரியாத துணைவராயிருந்தும் பிரிந்து குறுகினார்; (அதற்குக் காரணம் குறுகிடலாலாவது என்றபடி) துணைவராம் - என்றது பிரியாத் துணைவராயிருந்தும் என்ற குறிப்புடன் நின்றது.
துணைவர் ஆம் - ஆம் - ஆகும்; துணைவராதலின் பின்னர், அவரை (தோழரை - சேரரை) இறைவர்பால் அணைவிக்கும் தன்மையராகும் என்ற குறிப்பும் காண்க. “உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்Ó என்ற திருக்குறட் கருத்தும் ஈண்டு நினைவு கூர்தற்பாலது.
பாய - பரவிய - நிரம்பிய; கங்கைசூழ் -கங்கையினைக் கலைரபோலச் சூழ்ந்து சுற்றிய; இரண்டனுருபு விரிக்க; இவ்வாறன்றிச் சூழ் - கங்கை உள் நிரம்பிய என்றுரைத்தனர் முன் உரைகாரர்.
நெடுஞ்சடை - நெடுமையாவது ஆயிர முகத்தாலும் பரவி எழுந்த கங்கைப் பெரு நீரினை அடக்கி முடிக்கு மளவு நீளுதல். பாமரை ......நன்னெறி - திருமலைச் சிறப்பிற் கூறிய வரலாறு; (31 - 39).
சேய - சேய்மையாகிய; செம்மைதரும் ஞானநெறி என்றலுமாம். செம்மை - சிவத்தன்மை; நன்னெறி - என்ற குறிப்புமது. குறுகிடுதல் - தீரும் - முடியும் - எல்லை அணித்தாதல்; சேய்மை குறுகுதல்; “தடுத்த செய்கைதான் முடிந்திடÓ (4260) என மேல் இதனை விளக்குதல் காண்க. எய்தும் - கூடும் நெறி; குறுகிட - சரா என்றுரைத்தலுமாம்.