பாடல் எண் :4270

சென்று கண்ணுத றிருமுன்பு தாழ்ந்துவீழ்ந்தெழுந்துசேணிடைவிட்ட
கன்று கோவினைக் கண்டணைந் ததுவெனக் காதலின் விரைந்தெய்தி
நின்று போற்றிய தனிப்பெருந் தொண்டரை நேரிழை வலப்பாகத்
தொன்று மேனிய "ரூரனே வந்தனை" யென்றென ருலகுய்ய.
42
(இ-ள்) சென்று.....எழுந்து - உள்ளே சென்று இறைவரது திருமுன்பு வணங்கி விழுந்து பின் எழுந்து, சேணிடை....எய்தி - நீண்டகாலம் நீளிடை விட்ட ஆன்கன்று தனது தாய்ப்பசுவினைக் கண்டு ஆர்வமுற அணைவது போல விரைவாகச் சென்று சேர்ந்து; நின்று.....தொண்டரை - நேர்நின்று துதித்த ஒப்பற்ற பெரிய அத்திருத்தொண்டராகிய நம்பிகளைநோக்கி; நேரிழை...உலகுய்ய - உமையம்மையார் பொருந்திய வலப்பாகத் திருமேனி யுடையாராகிய இறைவனார் "நம்பி ஆரூரனே! உலகுய்ய வந்தனையோ?" என்று அருளிச் செய்தனர்.
(வி-ரை) சேணிடை....அணைந்தது வென - ஆன் கன்றும் ஆவும் என்ற, இவ்வுவமை பலவிடத்தும் பயின்று வருவதொன்று; ஆயின் இதனை ஆசிரியர் எடுத்துக் கையாளும் முறைகள் மிகச்சிறப்புடையன. "ஈன்றவான் கனைப்புக் கேட்ட கன்று போல்" (214); "கன்று தடையுண் டெதிரழைக்கக் கதறிக் கனைக்கும் புனிற்றாப் போல்" (3882) என்ற இரண்டிடங்களிலும் இவ்வாறு நம்பிகளைக் கன்றாகவும் இறைவரை, அதனை உடனின்று ஊட்டிக் காக்கும் தாயாகவும் உவமித்த நியமம் காண்க. "கன்றகல் புனிற்றாப் போல்வர்" (761) என்றவிடத்து இறைவரைக் கன்றாகவும் கண்ணப்ப நாயனாரை அதனைக் காக்கும் தாயாகவும் அவ்விடத் தமைதி பெற உவமித்த தகவும் கண்டுகொள்க. அங்கங்கம் உரைத்தவையும் பார்க்க.
நேரிழை வலப்பாகத் தொன்று மேனியர் - "பொருப்பரையன் மடப்பாவை யிடப்பாலானை" முதலாகப் பயின்று வருவன ஐயன் சார்பு பற்றிக் கூறுவன. இங்கு "நேரிழை ஒன்றும் வலப்பாக மேனியர்" என்றது அம்மையாரது சார்பின் மிகுதி பற்றிக் கூறியது. அம்மைக்கு ஐயன் வலப்பாகத்தர் என்பது. இரண்டும் ஒரு பொருளையே குறிப்பனவாயினும், ஈண்டு, அருள் பழுத்தொழுகும் மிகுதி பற்றி இவ்வாறு கூறினார். அம்மை - வீட்டுக்குடையவள் என்ற வழக்கும் காண்க.
ஊரனே உலகுய்ய வந்தனை - என்க; உலகுய்யச் செய்து வந்தனையே! என்ற நன்மையருளி ஆட்கொண் டழைத்தபடி; "மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திட" (35); செய்து என்பது குறிப்பெச்சம். "என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன் றிருக் குறிப்பே" (தேவா); ஊரன் - நம்பியாரூரன்.
தனிப்பெருந் தொண்டர் - நம்பிகளது ஒப்பற்ற சிறப்புடைமை குறித்தபடி.