பாடல் எண் :4273

மங்கை பாகர்தந் திருமுன்பு சேய்த்தாக வந்தித்து மகிழ்வெய்திப்
பொங்கு மன்பினிற் சேரலர் போற்றிடப், புதுமதி யலைகின்ற
கங்கை வார்சடைக் கயிலைநா யகர்திரு முறுவலின் கதிர்காட்டி
"இங்கு நாமழை யாமைநீ யெய்திய தென்?" னென வருள்செய்தார்.
45
(இ-ள்) மங்கை....போற்றிட - உமையம்மையாருடைய வலப்பாகத் திருமேனியரது திருமுன்பு சென்று தூரத்தே நின்று தொழுது மகிழ்ச்சியுற்று மேன்மேல் அதிகரிக்கின்ற அன்பினாலே சேரலர் துதித்திட; புதுமதி....கயிலை நாயகர் - பிறைச் சந்திரன் சஞ்சரிக்கும் கங்கை சூடிய நீண்ட சடையினை உடைய கயிலையினிறைவர்; திருமுறுவலின்....அருள் செய்தார் - திருப்புன் முறுவலையுடைய இனிய ஒளியினைக்காட்டி "நாம் அழையாமல் இங்கு நீ வந்தது என்னை?" என்று அருளிச் செய்தனர்.
(வி-ரை) போற்றிட - துதித்து நிற்க.
புதுமதி - தேய்மதியின்பின் புதிதின் முறைத்து விரியநின்ற ஒற்றைக்கலையுடைய மதி; பிறை.
அலைகின்ற கங்கை - அலைதற்கிடமாகிய கங்கை.
திருமுறுவலின் கதிர்காட்டி - திருப் புன்முறுவலின் இள ஒளியினைக் காட்டி; முறுவல் - சிறுநகை; வரவு அங்கீகரித்த நிலைகாட்டும் மெய்ப்பாடு. இறைவரது முறுவலே புரமெரித்தது; இங்கு அவ்வாறன்றி அருட்புன்முறுவலாயிற்று என்பது; "குமிண்சிரிப்பும்" - "சிரித்த முகம் கண்ட" (தேவா)
"நாம் அழையாமை நீ இங்கு எய்தியதென்னை?" - இஃது இறைவர் சேரலனாரை நோக்கி வினாவியருளியது.