பாடல் எண் :4279

வாழி மாதவ ராலால சுந்தரர் வழியிடை யருள்செய்த
ஏழி சைத்திருப் பதிகமிவ் வுலகினி லேற்றிட வெறிமுந்நீர்
ஆழி வேந்தனாம் வருணனுக் களித்திட, வவனுமவ் வருள்சூடி

ஊழி யிற்றனி யொருவர்தந் திருவஞ்சைக் களத்திலுய்த் துணர்வித்தான்.
51
(இ-ள்) வாழி.....திருப்பதிகம் - வாழ்வுதரும் மாதவராகிய ஆலாலசுந்தரர் திருக்கயிலையினை நோக்கி வரும் வழியிலே அருளிச்செய்த ஏழிசைத் திருப்பதிகத்தினை; இவ்வுலகினில்....அளித்திட - இவ்வுலகத்தில் யாவரும் உய்யும் பொருட்டுப் பரவச்செய்ய; அலை எறியும் முந்நீர்க்கடலின் அரசனாகிய வருணனுக்குத் தந்து அவர் ஏவியிட; அவனும்....உணர்வித்தான் - அவ்வருணனும் அவ்வருளினைச் சிரமேற்றாங்கி ஊழியிலும் அழியாத ஒருவராகிய சிவபெருமானது திருவஞ்சைக்களத்தில் சேர்த்து உணர்வித்தனன். (அதனால் அத்திருப்பதிகம் இங்கு வழங்கலாயிற்று).
(வி-ரை) ஆலாலசுந்தரராகிய நம்பிகள் திருவஞ்சைக்களத்தினின்றும் இறைவரருளிய வெள்ளை யானையின்மேல் திருக்கயிலையினை நோக்கிச் செல்லும் வழியிடைத் "தானெனை முன் படைத்தான்" என்று தொடங்கும் திருப்பதிகத்தினை ஓதிக் கொண்டே சென்றனர் என்பது முன் உரைக்கப்பட்டது (4167). ஆயின், அத்திருப்பதிகம் இந்நில வுலகில் வந்து வழங்குவதாமாறு யாங்ஙனம்? என்னும் ஐயத்தினை நீக்குதற்கு எடுத்து வரலாறு கூறியது இத்திருப்பாட்டு.
உய்த்துணர்வித்தான் - நம்பிகள் அப்பதிகத்தினை வருணனுக்கு அளித்து, "இதனைக் கொண்டு சென்று அஞ்சையப்பர்க் கறிவிக்க" என்று ஆணையும் இட்டாராதலின், அவனும் அவ்வாணையினைச் சிரத்திற்சூடி அவ்வாறே திருவஞ்சைக்களத்தில் உய்த்து உணர்த்தினானாக, இவ்வாறு வழங்கலாயிற்று என்பது. "இசைந்தேத்திய பத்தினையும், ஆழி கடலரையா அஞ்சையப்பர்க் கறிவிப்பதே" (பதிகம். 10) என்ற பதிகப்பகுதி இதற்கு அகச்சான்றாகிய ஆதரவாகும்.
வழியிடை - திருவஞ்சைக்களத்தினின்றும் திருக்கயிலைக்குச் சேரும் வழியில்.
ஏழிசைத் திருப்பதிகம் - "தானெனை முன் படைத்தான்" என்று தொடங்கும் திருநொடித்தான்மலைத் திருப்பதிகம். (4267 பார்க்க) "ஏழிசை யின்றமிழா லிசைந்தேத்திய பத்தினையும்" (பதிகம் 10).
வருணனுக் களித்திட - ஆழிகடலரையா! பதிதினையும் அஞ்சையப்பர்க் கறிவிப்பதே (பதிகம் 10).
ஊழியிற் றனி ஒருவர் - "ஊழிதொ றூழி முற்றும் முயர்" என்று கூறிய பதிகக் குறிப்பு; உணர்வித்தல் - அறிவித்தல். (பதிகம்).