பக்கம் எண் :


திருப்பரங்குன்றம்177

பதவுரை

பன்றி அம்கொம்பு-பன்றியினது அழகிய கொம்பையும், கமடம்- ஆமையினது ஓட்டையும், புயங்கம்-பாம்பையும், சுரர்கள் பண்டையென்பு- தேவர்களது பழைய எலும்புகளையும், அங்கம்-கங்காளத்தையும், அணிபவர் சேயே-தரித்துக்கொண்டுள்ள சிவபெருமானது திருக்குமாரரே! பஞ்சாம் கொஞ்சுகிளி-கூட்டில் இருந்துகொண்டு கொஞ்சுகின்ற கிளிப்பிள்ளைகள், வந்து வந்து-கூட்டின் முகப்பில் வந்து வந்து, ஐந்துகர பண்டிதன் தம்பியெனும்-ஐந்து கரங்களையுடைய ஞானபண்டிதராகிய விநாயகமூர்த்தியினது இளைய சகோதரரே என்று கூறுகின்ற, வயலூரா-வயலூர் என்கின்ற புனித திருத்தலத்தில் வாசஞ் செய்பவரே! சென்று முன் குன்றவர்கள் தந்த- குன்றுகளில் வசிப்பவராகிய வேடுவர்கள் முன்னாளிற் சென்று கொடுத்த, பெண் கொண்டு-வள்ளிநாயகியாரை மணங்கொண்டு, பைம்பொன் மலர்செறி-அழகிய பொன்நிறத்தையுடைய மலர்கள் மிகுந்து, வளர் செண்பகம்-வளர்ந்து ஓங்கிய செண்பக விருட்சங்களின், சோலை-சோலைகளால் சூழப்பெற்றதும், திங்களும்- சந்திரனும், செம்கதிரும்-சிவந்த சூரியனும், மங்குலும்-மேகமும், தங்கும் உயர்- தங்கும்படி உயர்ந்தும், தென்பரங்குன்றில் உறை-தென்னாட்டில் சிறப்புற்றதுமாகிய திருப்பரங்குன்றத்தில் வாசம் புரிகின்ற,பெருமாளே- பெருமையிற் சிறந்தவரே! மன்றல்-வாசனை பொருந்திய, அம்கொந்து மிசை- அழகிய பூங்கொத்துகளின் மீது, தெந்தனம் தெந்தன என-தெந்தனம் தெந்தன என்று ரீங்காரம் செய்து கொண்டு, வண்டு இனம்-வண்டின் கூட்டங்கள், கண்டு தொடர்-தேனையுண்பதற்காகப் பார்த்துக் கொண்டு தொடரும்படியான, குழல் மாதர்-கூந்தலையுடைய பெண்களது, மண்டிடும்-நெருங்கியுள்ள, தொண்டை அமுது உண்டு கொண்டு-கொவ்வைப்பழத்தை நிகர்த்த இதழில் பெருகும் அமிர்தத்தைப் பருகிக்கொண்டு, அன்புமிக-ஆசையானது மிகுதியையடையவும், வம்பு இடும்-இரவிக்கையை யணியும், கும்பகன-குடத்தை யொத்துப் பருத்த, தனமார்பில் ஒன்ற-தனபாரங்களையுடைய மார்பில் பொருந்தவும், அம்பு ஒன்று விழி கன்ற-பாணத்தை யொத்த கண்கள் சோரவும், அங்கங் குழைய-சரீரம் குழைந்து உருகவும், உந்தியென்கின்ற-உந்தியாகிய, மடுவிழுவேனை-மடுவில் விழுகின்றவனை, சிலம்பும்-இரத்தினச் சிலம்பையும், கனக தண்டையும்- பொன்னாலாகிய தண்டையையும், கிண்கிணியும்-கிண்கிணியையும், ஒண் கடம்பும்-அழகிய கடப்ப மலரையும்,