உய்ந்து முத்தியென்கிற கரைசேர்ந்து முடிவிலா இன்பத்தை நுகர முடியாது. கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசித்தத் திடத்திற் புணையென யான்கடந் தேன்சித்ர மாதரல்குற் படத்திற் கழுத்திற் பழுத்தசெவ் வாயிற் பணையிலுந்தித் தடத்திற் றனத்திற் கிடக்கும் வெங்காம சமுத்திரமே. -கந்தரலங்காரம். பன்றியங்கொம்பு :- சிவபெருமான் பன்றியின் கொம்பை யணிந்த வரலாறு காசிப முனிவருக்குத் திதியின்பால் பிறந்தவனும், பொற்கணைகளை யுடையவனுமாகிய இரணியாக்கன் வாணிகேள்வன் பால் வரம்பல பெற்று, மூவுலகும் ஏவல்கேட்ப அரசியற்றினான். உலகங்களுக்கெல்லாம் தானே தலைவன் என்றும் தன்னையன்றி வேறு தலைவனில்லை என்றும், மனத்தருக்கினான். அத் தைத்தியன் பால் தவமுனிவர் சென்று “பூதேவி மணாளனாகிய புனத் துழாயலங்கற் புனிதனே கடவுள்” என்றனர். அது கேட்ட இரணியாக்கன் விழிசிவந்து “அப்பூதேவியைப் பாயாகச் சுருட்டிக் கடலிற் கரைத்து விடுகிறேன்” என்று கூறி, தன் தவவலியால் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு ஆழ்கடலை யணுகினன். விண்ணு ளோர்க் கெலா மல்லலே வைகலும் விளைத்து நண்ணு மாடகக் கண்ணினன் முன்னமோர் நாளில் மண்ண கந்தனை வௌவியே வயிற்றிடை வைத்துத் துண்ணெனப் பிலம்புக்கனனுயி ரெலாந்துளங்க, -கந்தபுராணம். அதனையுணர்ந்த செந்தழலோம்பும் அந்தணரும், வானவரும் மாதவரும், பூதேவியும் அஞ்சி பச்சைமாமலை போல் நின்ற அச்சுதனை யண்மி, “அரவணைச் செல்வ! அடியேங்களுக்கு அடைக்கலம் வேறில்லை; ஆண்டருள்வீர்” என்று வேண்டி நின்றனர். நாராயணர், “அஞ்சுந் தன்மையை |