பக்கம் எண் :


திருப்பரங்குன்றம்181

விடுமின்” என்று வையகத்தைக் கொணர்வான் வேண்டி *வராக ரூபமெடுத்தார். நீலவெற்பினும் இருமடங்கு உயரமும் கால்களின் நடுவே ஆயிரங்காத தூரம் விசாலமும், அசையுந்தோறும் திக்குகளிற்படும் வாலும், அண்டங்களைக் குலுக்குகின்ற சுவாசமும், வடவாமுகாக்கினி போன்ற பார்வையும் உடைய அவ் வராகமூர்த்தி உராய்ஞ்சுவதால் அண்டச்சுவர்கள் அசைந்தன. இத்துணைப் பேராற்றலுடைய வராக மூர்த்தி ஏழு கடல்களையும் கலக்கிச் சேறுபடுத்தி, அளவின்றி நின்ற பெரும் புறக்கடலுள் முழுகி இரணியாக்கனைக் கண்டு அவனோடு பொருது, தமது தந்தத்தால் அவனைக் கிழித்துக் கொன்று, தனது கொம்பினுனியால் பூமியைத் தாங்கி மேலெழுந்து வந்தார். அப்பூமியை ஆதிசேடனது ஆயிரம் பணாமகுடங்களில் நிலை நிறுத்தினார். அது கண்டு விண்ணவரும் மண்ணவரும் விஷ்ணுமூர்த்தியைத் துதித்தார்கள்.

ஓரிமைக்குமுன் பாதலந் தன்னின்மா லுற்றுக்
கூரெயிற்றினாற் பாய்ந்துபொற் கண்ணனைக் கொன்று
பாரினைக்கொடு மீண்டுமுன் போலவே பதித்து
வீரமுற்றனன் றன்னையே மதித்தனன் மிகவும்.
   -கந்தபுராணம்.

அவ்வெற்றியின் காரணத்தாலே வராகம்* மனந்தருக்குற்று தானே உலகங்களுக்குத் தனிப் பெருந் தலைவனென்ற பிரமையாலும், இரணியாக்கனது இரத்தத்தைப் பருகின வெறியினாலும், மயங்கி எண்கிரிகளை இடித்துத் தள்ளியும், உயிர்கள் பலவற்றையும் வாயிற் பெய்து குதட்டியும், மேகங்கள் ஏழும், நாகங்கள் எட்டும் அஞ்சும்படி ஆர்ப்பரித்தும், கடைக்கண்ணில் ஊழித்தீயைச் சிந்தியும், பூமியைத் தோண்டி மதங்கொண்டுலாவியது. அதனைக் கண்டஞ்சிய பிரமன் இந்திரன் இமையவர் இருடிகள் முதலியோர் வெள்ளி மலையை யடைந்து நந்தியண்ணலின்பால் விடை பெற்று திருச்

*வராகம் - பன்றி.