பக்கம் எண் :


182திருப்புகழ் விரிவுரை

சந்நிதிச் சென்று, கருணையங்கடவுளாங் கண்ணுதலைக் கண்டு, வலம் வந்து வணங்கி நின்று “பணிவார் பவப்பிணி மாற்றும் பசுபதியே! புரமூன்றட்ட புராதன!

திருமால் வராக மூர்த்தியாகியஉலகங்களுக்கும், உயிர்களுக்கும் உறுகண் புரிகின்றனர்” என்று முறையிட்டனர்.

உடனே சிவபெருமான்திருவுளமிரங்கிக் குன்றமெறிந்த குமாரக் கடவுளை அவ்விடரை நீக்கி வர அனுப்பியருளினார். அறுமுகப் பெருமான் வராகமூர்த்தியை யணுகி, அயிற்படையால் அதன் நெற்றியிற் குத்தி நிலத்திலழுத்தி அதன் ஆற்றலை யடக்கினார். புத்தேளிர் பூமாரி பொழிந்தனர், வராகமூர்த்தியும் தோத்திரம் புரிந்தனர். அறுமுகனார் திருவுளமிரங்கி அவ்வராகத்தின் கொம்பைப் பறித்துக்கொண்டு போய் சிவபெருமான் திருமுன்பு வைத்தருளினார். தேவர்கள் வேண்டிக் கொள்ள அப் பன்றியின் கொம்பை அரனார் தம் திருமார்பில் தரித்துக் கொண்டனர்.

வராகமூர்த்தி தருக்கொழிந்து சிவசண்முகப் பெருமையை விளக்கும் வராக புராணத்தை தேவர் முதலியோர்க்குக் கூறியருளி வைகுந்த மடைந்தனர். இச்சம்பவம் வராக கற்பத்தில் நிகழ்ந்தது.

உத்பாட்யதம்ஷ்ட்ராம் தஸ்யைகாம் ஹரஸ்யோரஸி பூஷணம் ஏகஸ்ருங்க வராஹோபூத் ததா ப்ரப்ருதி மாதவ  -காளிகாகாண்டம்.

அன்று கொண்டதோர் மருப்பினைச் சின்னமா வணிந்தான்
இன்று மங்கவன் மார்பிடைப் பிறையென விளங்கும்
ஒன்று மற்றிது கேட்டனை நின்ற துரைப்பாம்
நன்று தேர்ந்துணர் மறைகளு மித்திற நவிலும்.
அங்கண்மா ஞாலந்தன்னை மேலினி யகழுமோட்டுச்
செங்கண்மா லேனயாக்கை யெயிற்றையோர் சிறுகை பற்றி
மங்குல்வா னுலகிற் சுற்றி மருப்பொன்று வழுத்த வாங்கித்
தங்கணா யகற்குச் சாத்தச் சண்முக னளிக்கு மென்பர்.
                                       
-கந்தபுராணம்.