கமடம்:- சிவபெருமான் ஆமையின் ஓட்டைத் தரித்த வரலாறு பண்டொரு காலத்தில் ஆதித்யர்களாகிய தேவர்களும், தைத்யர்களாகிய அசுரர்களும் தீரா பகையால் பல காலம் சமர் புரிந்தார்கள். அப்போரில் இருதிறத்தவரிலும் எண்ணிலார் இறந்து பட்டனர். அதனால் தேவாசுரர்கள் ஒருங்குகூடிப் பாற்கடலைக் கடைந்து அமுதமுண்டு அதிகநாள் சாவாதிருந்து அரும்போர் ஆற்ற வேண்டுமென்று நினைத்து, அயன்பால் தம் நினைவை வெளியிட்டு அப்பிரமனுடன் அனந்தசயனராகிய அச்சுதரிடஞ் சென்று குறையிரந்தனர். திருமால் “அவ்வாறேயாகுக” என்று அன்னாரை யழைத்துக் கொண்டு பாற்கடலையண்மி, மந்தரமலையை மத்தாகவும் சந்திரனை அம் மத்திற்குத் தறியாகவும், வாசுகியைத் தாம்பாகவும் அமைத்து, தேவர்கள் வாற்புறத்தும், அசுரர்கள் தலைப்புறத்தும், பிடித்து இழுத்துக் கடையுமாறு செய்தனர். இவர்கள் இழுக்கும் விசையினால் உடல் தேய்ந்து வருந்திய வாசுகி யென்னும் பணியரசன் துன்பம் பொறுக்க முடியாமல் ஆலகால விடத்தைக் கக்கினன். அது கண்டு அரியயனாதி அமரர் குழாம் அஞ்சியோடி அரனாரிடம் முறையிட, அவர் அவ்வாலகாலவிடத்தை யுண்டு கண்டத்தில் தரித்து திருநீலகண்டராக விளங்கினார். பின்னர் விநாயகர் பூசை செய்து தேவாசுரர்கள் மீண்டும் பாற்கடலைக் கடைவாராயினார்கள். அப்போது மந்தரமலை பாதலத்தில் அமிழ்ந்தது. உடனே நாராயணர் பெரிய கூர்ம (ஆமை) வடிவங் கொண்டு பாற்கடலிற் பாய்ந்து, தன் மேற்புறத்தை இலக்க யோசனை யிடமாக்கி மந்தரமலையைத் தாங்கி அமிர்தமதனம் புரியச் செய்தனர். |