பக்கம் எண் :


184திருப்புகழ் விரிவுரை

அடலின் மேதகு தேவரு மவுணரு மந்நாட்
கடல் கடைந்திடு மெல்லையின் மந்தரங் கவிழ
மெடிய மாலது நிறுவியே பொருக்கென நீந்தந்
தடவி யுள்ளனைந் தாமையாய் வெரினிடைத் தரித்தான்!
                                      
-கந்தபுராணம்.

சுரரும் அசுரரும் மீண்டும் மாறி மாறிக் கடைய, மந்தரகிரி மேலும் கீழும் பக்கத்தும் சரிந்து போவதைக் கண்டு, கமட வடிவங் கொண்ட கமலக் கண்ணனுக்குக் கரங்கள் ஆயிரம் தோன்றின. பல கரங்கள் மலையின் உச்சியைப் பற்றி யூன்றின. பல கரங்கள் பர்வதத்தின் பக்கத்திற் சாயாமற் பற்றி நின்றன. பல கரங்கள் தேவாசிரர்கள் களைப்புறா வண்ணம் அன்னார்களுக்கு உதவியாக இருந்து கடல் கடைந்தன. அதன் பின் அமிர்தம் தோன்றியது; அச்சுதர் மோகினி வடிவந்தாங்கி அசுரரை யொழித்து அண்டருக்கு அமிர்தத்தை யீந்தனர்.

அக்காலம் மந்தரமலையைத் தாங்கி நின்ற மாதவன் அவதாரமாகிய கூர்மம், தன்னைவிடச் சிறந்தோர் ஒருவருமில்லை யென்று மனஞ் செருக்குற்று ஏழு கடலையும் ஒன்று கூட்டி, அதன் வெள்ளம் அவனியை யழிக்கும்படிக் கலக்கி, சிந்துவைச் சேறாக்கி ஆயிரங் கைகளாலும் ஆழியை வற்றச் செய்தது. கால்கள் கணக்கிலடங்காதவையாகின. திமிங்கலம் முதலிய நீர்வாழ்வன அனைத்தையு முண்டு பசி தணியாது கடல் நீர் முழுதுங் குடித்து தரை தெரியும்படி சேற்றையும் நக்கியது. உலகமெல்லாம் நடுங்கின. சந்திர சூரியர்கள் விண்ணில் சஞ்சரிக்காராயினார்கள். உலகமெங்கும் இருள் சூழ்ந்தது. பிரமாதி தேவர்கள் ஓலமிட்டுக் கதறி கயிலைமலைச் சென்று “அழலுந்த நகுந்திறல் கொண்ட” அந்திவண்ணர் பால் நிகழ்ந்தது கூறி முறையிட்டனர்.

கறைமிடற் றண்ணல் கருணைபூத்து, புன்முறுவல் கொண்டு “அடியார்களே! அஞ்சன்மின்” என்று அபயமீந்து, தமது மடித்தலத்தில் எழுந்தருளியுள்ள கந்தப்