அக்காலத்து அரிவையர் முயக்கில் அவாவுற்று தமதிருக்கை நாடிய அந்தணர் தம்தம் வீதியில் கற்பழிந்துலவுங் காரிகையரைக்கண்டு, “நம் தவத்தை யழித்து நமது பத்தினிகளின் கற்பையொழித்தவன் சிவனே; அவன் ஏவலால் அரிவையாக வந்தவன் அச்சுதனே” என்று ஞானத்தாலறிந்து, விஷ விருட்சங்களைச் சமிதையாக்கி வேம்பு முதலியவற்றின் நெய்யினால் அபிசார வேள்வி செய்து அதனின் றெழுந்த பல பொருள்களையும் பரமபதியின் மீது பிரயோகிக்க, சிவபரஞ்சுடர் அவற்றை உடை, சிலம்பு, ஆடை, ஆயுதம், மாலை, சேனை முதலியனவாகக் கொண்டனர். தவமுனிவர் தாம் பிரயோகித்தவை முழுதும் அவனாயினதைத் கண்டு யாகாக்கினியினின்றும் எழுந்த சர்ப்பங்களைச் சம்புமேல் விடுத்தனர். அந்நாகவினங்கள் அஞ்சும் தன்மையின் அவனியதிரும்படி அதிவேகமாகத் தமது காளி, காளாஸ்திரி, யமன், யமதூதன் என்னும் நான்கு நச்சுப்பற்களில் விடங்களைச் சொரிந்து கொண்டு காள கண்டன் பால் வந்தன. மதனனை ஏரித்த மகாதேவன், ஆதிகாலத்தில் கருடனுக்கஞ்சித் தம்பால் சரண்புகுந்த சர்ப்பங்களைத் தாங்கியிருந்ததுடன் இப்பாம்புகளையும் ஏற்று “உமது குலத்தாருடன் ஒன்று கூடி வாழுங்கள்” என்று திருவுளஞ் செய்து அப்பன்னாகங்கள் அஞ்சும்படித் திருக்கரத்தாற் பற்றிச் சிறிது நேரம் நடித்து, திருக்கரம், திருவடி, திருவரை, திருமார்பு முதலிய ஆபரணங்களாக அணிந்து கொண்டனர். ஏந்திய பின்னர் வேள்வி யெரியதற் கிடையே யெண்ணில் பாந்தளங் கொழுந்து தீயோர் பணியினார் சீற்றங்கொண்டு போந்தன வவற்றை மாயோன் புள்ளினுக் கஞ்சித் தன்பால் சேர்ந்ததோர் பணிகளோடு செவ்விதிற் புனைந்தா னெங்கோன் -கந்தபுராணம். |