சென்று அங்கு உலாவுகின்ற வள்ளியம்மையாருடைய இன்பத்தைப் புகழ்ந்து பேசிய திருப்பரங் குன்றத்தில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே! மலைபோல் பருத்த தனபாரங்களினாலும், வளையல் அணிந்த சிவந்த கரங்களாலும் எல்லோராலும் வடுப்படுத்தப்பட்ட கொவ்வைப்பழம் போன்ற சிவந்த இதழினாலும், வாசனை வீசுகின்ற கூந்தலினாலும், இளையோர்களை மயக்குகின்ற மனமுடைய பொதுமாதருடைய வசமாகி, நெருப்பில் வீழ்ந்த பஞ்சு போல் அறவே யழிகின்ற அடியேன், அல்லல் படுகின்ற பந்தம் நிறைந்த பிறவிப் பெருங்கடலினின்றும் கரையேறுமாறு, இசை நூல்கள் இயம்புகின்ற பலவகையான சத்தங்களை யொலிக்கின்ற மணித் தண்டைகள் சூழ்ந்துள்ள தேவரீருடைய தாமரை போன்ற திருவடிகள் இரண்டையுந் தந்து உதவி அருள்புரிய வேணும். விரிவுரை எரிப்படும் பஞ்சுபோல் :- விலை மகளிருடைய தனம், கரம், விழி, இதழ், குழல் முதலிய உறுப்புக்களைக் கண்டு மயங்கித் தியங்கி விரக அக்கினி மூண்டு, தீயில் விழுந்த பஞ்சுபோல் காமுகர் அழிவர். இனற்படுந் தொந்தவாரி :- இனல்-இன்னல், (துன்பம்), சொந்தம்-உறவு, கிளை-மனைவி மக்கள் முதலிய தொடர்புகளால் வரும் பந்தபாசம். அதனால் பிறவிக் கடலில் வீழ்ந்து ஆன்மாக்கள் அல்லலுறும். அப்பிறவிக் கடலினின்றும் கரையேறும் பொருட்டு இறைவனுடைய திருவடித் தோணியைப் பற்றுதல் வேண்டும். “யாது நிலையற்றலையும் ஏழுபிறவிக் கடலை எறவிடு நற்கருணை ஓடக்காரனும்” -திருவகுப்பு. |