இசைத்திடுஞ் சந்தபேதம் ஒலித்திடும் தண்டை :- முருகவேள் என்றும் மாறாத இளம் பருவமுடையவர். அதனால் அப்பெருமானுடைய திருவடிகளில் இரத்தினமணித் தண்டைகள் விளங்குகின்றன. அவைகள் நானாவகையான வேதசந்தங்களை ஒலிக்கின்றன. அவைகள் மிகவும் இனிய நாதங்களை உண்டுபண்ணுகின்றன. உலகமே இனிமையின் ஓசையால் மகிழ்ச்சியுறுகின்றது. இனிய ஒலி மன ஒருமைப்பாட்டையும் தருகின்றது. வீணை யோசையால் யானையின் மதமும் அடங்கும். இன்னோசையால் நோய் நீங்கும். இனிய நாதத்தைக் கேட்டு பாம்பு பசு முதலியவைகளும் உவகையுறுகின்றன. கொடிய விலங்குகளும் தத்தம் கொடுமைகளினின்றும் நீங்கப் பெறுகின்றன. எனவே இனிய நாதத்தினால் விளைகின்ற பயன்கள் பலப்பல. இத்தகைய இனிய நாதங்கள் இறைவன் திருவடித் தாமரையில் விளங்குந் தண்டைகளினின்று தோன்றுகின்றன. .................................”அணிமணித் தண்டையார்க்கும் செழுமலரடியுங் கண்டான் அவன் தவம் செப்பற் பாற்றோ?” -கந்தபுராணம். செருக்கொழுந் தும்பர்சேனை துளக்கவென் றண்டமூடு செழித்திடுஞ் சங்கபாணி:- இந்த ஏழாவது அடி, கண்ணபிரான் இந்திரன் முதலிய இமையவருடன் போர்புரிந்து வென்று பாரிஜாத விருட்சத்தை மண்ணுலகிற்குக் கொணர்ந்த வரலாற்றைத் தெரிவிக்கின்றது. பாரிஜாத வரலாறு பூபாரந் தீர்க்கவந்த புருஷோத்தமனாகிய கண்ணபிரான் துவாரகையில் வாழ்கின்றார். உருக்குமணியம்மையாரும் சத்யபாமையும் அவருடைய மனைவியர்களாக |