பக்கம் எண் :


திருப்பரங்குன்றம்193

விளங்கினார்கள். இவர்கள் சீதேவி பூதேவிகளின் அமிசங்கள்.

ஒருநாள் வீணை வல்லுநராகிய நாரதமுனிவர் இந்திர வுலகிலிருந்து பாரிஜாத மலரால் தொடுத்த பரிமள மிக்க மலர் மாலையைக் கொணர்ந்து கண்ணபிரானிடம் கொடுத்து அவரைத் துதிசெய்து மகிழ்ந்து சென்றனர். கண்ணபிரான் அப்பாரிஜாத மலர்மாலையை உருக்குமணி யம்மையாரிடம் கொடுத்தனர். மாலையணிந்த உருக்குமணி யம்மையைக் காண மாலையில் சத்யபாமை வந்திருந்தனர். தேவலோக மலர்மாலையைக் கண்டு அதிசயமுற்றனர். அதன் நறுமணம் நாசியைத் தொளைத்தது. “இது ஏது?” என்று வினவினார். உருக்குமணியம்மை “இது இந்திரனுடைய நந்தவனத்திலுள்ள பாரிஜாத மலர்மாலை; இதையணிந்து கொண்டவர் இளமை நலங்குன்றாது இருப்பர். இதனை இன்று பகவான் பரிந்தளித்தனர்” என்றனர்.

சத்யபாமை தன்னில்லம் போய், அணிகலன்களை யெல்லாம் அகற்றி, நிலத்தில் வீழ்ந்து கண்ணீர் சிந்தி விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். அங்கு நாரத முனிவர் வந்து சத்யபாமையைக் கண்டார். சத்யபாமை அவரைத் தொழுது அழுதாள்.

“அம்மணி! என்ன கவலை?”

“சுவாமி! அந்த மாய கிருஷ்ணர் இந்திர மலர் மாலையை உருக்குமணிக்கு ஈந்தனர். நான் பிரியமானவளாக இருந்தால் எனக்குத்தானே தரவேண்டும்? கொஞ்சுவதும் கூலாவுவதும் இங்கே; கொடுப்பதும் அடுப்பதும் அங்கே. என்ன அநியாயம்; நரகாசுர வதத்திற்காக நான் அவருக்குத் தேரோட்டி வெற்றி பெறச் செய்த உபகாரத்தைக்கூட அவர் நினைக்கவில்லை.