ஆ!ஆ! இத்தனை மர்மமும் வர்மமும் உடையவர் என்று நான் அவரைக் கனவிலுங் கருதவில்லை. எனக்கு இதயம் வெடித்து விடுகின்றது போல் இருக்கின்றது” என்று கூறினாள் சத்யபாமை. நாரதர், “தாயே! வருந்தற்க. இது உலக இயல்புதான். உன்னைக் கண்ட இடத்தில் அவர் கபட நாடகம் போடுகின்றார். அவருடைய அன்பு அத்தனையும் உருக்குமணிமேல் தான். இதை நீ இப்போதுதான் அறிகின்றாய் போலும். பாவம், உன்னைக் கண்டால் எனக்கு உள்ளம் உலைகின்றது. மலர் மாலையை அவளிடம் தந்தவர் அதில் ஒரு மலராவது உனக்குத் தரக்கூடாதா? கொடுத்து வைத்தது அவ்வளவுதான். மனதைத் திடப்படுத்திக்கொள். நான் வருகின்றேன்” என்று கூறிவிட்டுச் சென்றனர். நாரதர் சொல் அவள் தாபத்தை அதிகப்படுத்திவிட்டது. இரவு வழக்கம்போல் கண்ணபிரான் சத்யபாமையின் திருமாளிகைக்கு வந்தனர். அவள் அடிபட்ட மான் போலும், அணிகலன்களின்றி, தோகையை உதிர்த்த மயில் போலவும் முத்து முத்தாகக் கண்ணீர் சிந்திச் சிந்தா குலமுடையவளாக இருப்பதைக் கண்டனர். அவளை இரு கரங்களாலும் எடுத்துக் கண்ணீர் துடைத்து, “மானே! உனக்கு என்ன கவலை? நீ இப்படித் திடீர் என்று வருந்தக் காரணம் யாது? உள்ளதை யுரை. எனக்கு அன்பு மிக்க நீ வருந்தக் காண்பேனோ?” என்றனர். சத்யபாமை, “சுவாமி! உமது அன்பும் சொல்லும் வெறும் கற்பனை. உம்மை நான் நம்பமாட்டேன். என்னிடம் வந்து என்னைப் புகழ்வதும் போற்றுவதும் புரட்டு. உம்மை நம்பவே கூடாது. ஆ! ஆ!! நீர் செய்யும் பொய்யன்பைக் கண்டு இனி நான் ஏமாற மாட்டேன். இனி உமக்கு இங்கு வேலை கிடையாது. போய் வாரும்” என்றாள். |