கண்ணபிரான், “என் அன்பு மிக்க ஆருயிரே! நீ இப்படி என்னை வெறுத்துரைக்க காரணம் யாது? நான் உன்னை என் உயிராகக் கருதியுள்ளேன். உன்னைவிட எனக்கு இனி யார் ஒருவருமில்லை” என்றார். சத்யபாமை, “சுவாமி! ஏன் இந்த வஞ்சனை வார்த்தை பேசுகின்றீர்? இந்திரவுலக பாரிஜாத மலர் மாலையை யாருக்குக் கொடுத்தீர்? அவள் வீட்டிற்கே போம். நான் உண்மையாக உமக்கு அன்புடையவளாக இருப்பேனாயின் அம்மாலையை எனக்குத்தானே தந்திருப்பீர். இதனால் உமது பொய்மை புலப்படுகிறது” என்றாள். கண்ணபிரான், “அடடே! இவ்வளவும் நாரதர் செய்த நாடகமா? கண்மணியே! இதற்கா இந்த அமர்க்களம்? நான் வரும் வழியில் அவளைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது. அதற்காக நீ சிறிதும் வருந்த வேண்டாம். உனக்கு அந்த பாரிஜாத மரத்தையே கொணர்ந்து தருவேன். வருந்தற்க” என்றனர். அந்த வேளையில் நாரத முனிவர் வந்தார். “வாரும் நாரதரே! நீர் வைத்த தீ இங்கு கொழுந்துவிட்டு எரிகின்றது. உமக்கு இப்படி வேடிக்கைப் பார்ப்பது விளையாட்டாக ஆகிவிட்டது. சீக்கிரம் போய் இந்திரனைக் கண்டு, நான் கூறியதாகக் கூறி பாரிஜாத விருட்சத்தை இங்கு அனுப்புமாறு செய்யும். இப்போதே அம்மரம் இங்கு வரவேணும்” என்றார். நாரத முனிவர் விரைந்து விண்ணுலகம் புகுந்து இந்திரனைக் கண்டு கண்ணபிரானுடைய கட்டளையைக் கூறினார். இந்திரன் அது கேட்டு புன்முறுவல் செய்தான். “நாரத முனிவரே! இது என்ன விந்தை! பொன்னுலகத்தில் உள்ள பாரிஜாதத்தை மண்ணுலகத்திற்கு அனுப்புவதா? இது பாற்கடலில் அமுதத்துடன் பிறந்த |