பக்கம் எண் :


196திருப்புகழ் விரிவுரை

ஐந்து தருக்களாகிய கற்பகம், அரிசந்தனம், பாரிஜாதம், மந்தாரம், சந்தானம், என்ற தருக்களில் ஒன்று. இதன் மகிமை அளவிடற்கரியது. ஆதலின் இதனை அனுப்புவது முடியாத காரியம். வேண்டுமாயின் இதன் மலரை யனுப்புவேன்” என்றான்.

நாரதர் இச்செய்தியை வந்து பார்த்தசாரதியிடம் பகர்ந்தனர். உடனே வேணுகோபாலர் வெகுண்டெழுந்தார். “நன்றி கெட்ட இந்திரன் இம்மரத்தை அனுப்ப மறுத்தானோ? நரகனைக் கொன்று விண்ணுலகை அவனுக்குத் தந்த உதவியை ஒரு சிறிதும் எண்ணினானில்லை, அவனுக்கு புத்தி புகட்டுவேன்” என்று ஆயுதபாணியாகத் தேரேறி விண்ணுலகஞ் சென்றார்.

தேவர்கட்கும் தேவகிபுதல்வருக்கும் கடும் போர் நடந்தது. அமரர்கள் புறங்காட்டி ஓடினர். இந்திரன் வந்து எதிர்த்தான். அவனுடன் சிறிது நேரம் போராடி அவனை அழிக்கத் திருவுளங்கொண்டு சக்கரப்படையை எடுத்தார். காசிப முனிவர் எதிர்த் தோன்றி இருவருக்குஞ் சமாதானஞ் செய்து போரை நிறுத்தினார். இந்திரன் கண்ணபிரானைத் தொழுது பாரிஜாத விருட்சத்தைக் கொடுத்தனுப்பினான். அதனைப் பகவான் கொணர்ந்து சத்யபாமையின் அரண்மனையில் வைத்தனர். சத்யபாமை மனம் மகிழ்ந்தாள்.

கருத்துரை

சூரனை அடக்கிய வீரமூர்த்தியே! மால்மருகரே! பராசலமேவிய பரமரே! சிறியேன் மாதர் மயக்குறாது உன் மலரடி சேர அருள் புரிவீர்.