மாயக்காரன் போல் மாய்த்தவரே! பரிசுத்தமான போர் சூரபன்மனை சுழல் மாதரும் போல் அழித்தவரே! திருச்செந்திலம்பதியில் வாழ்கின்ற ஆண்மையையுடையவரே! பெருமையிற் சிறந்தவரே! பழமையான தமிழ் மொழியால் கவிமாலைகளைச் சந்தத்தோடு நீளமாகக் கோடிகோடியாக எந்நேரமும் பாடிக்கொண்டு அழிந்து போகின்ற மனிதர்களின் வீட்டு வாசல்தோறும் அவர்களைத் தேடிக்கொண்டு உழன்று அவமே அலையா வண்ணமும், பிறவிகள் தோறும் புரிந்த பழைய வினைகளாகிய சஞ்சிதவினை என்னை வந்து தொடராமல் விலகிப் போகவும், பெண்கள் மீதுள்ள ஆசைப் பெருக்கமானது அடியேனை விட்டு நெடுந்தூரத்துக்கு ஓடிப்போகவும், வழிவழியாக அடிமைப்பட்ட பழைய தொண்டனாகிய அடியேனை ஆட்கொள்ளுமாறு, போர்க்களத்தில் திந்தி திமிதோதி தீதித்தீதி தந்ததன தான தானத் தான செஞ் செணகு சேகு என்ற தாள வரிசைகளுடன் நடனமிடுவதும், செவ்வையான சிறிய பாதமும் விசாலமான தோகையும், அநுகூலத்தைச் செய்யும் தூய்மையான பார்வையும் தைரியமும் உடையதும், செம்பொன் போன்ற பிரகாசத்தையுடையதுமாகிய மயில் வாகனத்தின் மீது எக்காலத்தில் வந்து திருவருள் புரிவீர். விரிவுரை முந்து தமிழ் வடமொழிக்கும் தென்மொழிக்கும் ஆசிரியர் சிவபெருமானேயாவர். வடமொழியை பாணினிக்கும், தென்மொழியை அகத்தியர்க்கும் சிவபெருமான் உபதேசித்தனர். சிவபெருமான் இந்த இரு மொழிகளின் வடிவமாக விளங்குகின்றார். “ஆரியமுஞ் செந்தமிழும் ஆனான் கண்டாய்” -(அப்பர்) தேவாரம். |