செந்தமிழ் மொழி பல்லாயிரம் ஆண்டுகளாக இளமையாகவே செழித்தோங்கியுள்ளது! முச்சங்கத்திலும் நின்று நிலவியது. சிவபெருமான் மதுரையில் புலவர் குழாங்களில் தாமும் ஒருவராக இருந்து ஆராய்ந்த தனிச் சிறப்புடையது. நேற்று தோன்றி இன்று மறையும் ஏனைய மொழிகள் போலல்லாது எக்காலத்தும் எழில் குன்றாமல் இனிமை பயப்பது இத்தமிழ் மொழியே யாகும். சிவபெருமானே இதற்கு ஆசிரியராதலால் தொன்மை யுடையது. எல்லா மொழிகளுக்கும் முதன்மையுடையது எனினும் அமையும். முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி உழலாதே :- இத்தகைய அரிய தமிழைப் பயின்று அம்மொழிக்குத் தலைவனாகிய இறைவனைப் பாடி அதன் பயனைப் பெறாது பொருள் விருப்பதால் இன்றிருந்து நாளை இறக்கும் மனிதர்கள் வீடு தோறும் சென்று கொடாதவனைப் பாரி காரி என்றும், குணமில்லாத கீழ்மகனைத் தருமபுத்திரனுக்கு நிகரானவனென்றும், சிறிதும் வலியற்றவனை விஜயனென்றும், வறிதே புகழ்ந்து வாழ் நாளையும் கல்வி யறிவையும் கமரிற் கவிழ்த்த காமதேனுவின் பாலாக வீணாக்குகின்றனர். மிடுக்கிலாதானை வீமனே விறல் விசயனே வில்லுக் கிவனென்று கொடுக்கிலா தானைப் பாரியே யென்று கூறினுங் கொடுப்பாரிலை பொடிக்கொள் மேனியெம் புண்ணியன் எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் அடுக்குமேல் அம ருலகம் ஆள்வதற் கியாது மையுற வில்லையே. -சுந்திரமூர்த்தி சுவாமிகள். “வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி மஞ்சரி கோவை தூது பலபாவின் வண்புகழ் பாரிகாரி என்றிசை வாது கூறி வந்தியர்போல வீணி லழியாதே” -திருப்புகழ். |