உள்ளினுஞ் சுட்டிடு முணருங் கேள்வியிற் கொள்ளினுஞ் சுட்டிடுங் குறுகி மற்றதைத் தள்ளினுஞ் சுட்டிடுந் தன்மை யீதினாற் கள்ளினுங் கொடியது காமத் தீயதே. நெஞ்சினு நினைப்பரோ நினைந்து ளார்தமை எஞ்சிய துயரிடை யீண்டை யுய்த்துமேல் விஞ்சிய பவக்கடல் வீழ்ந்து மாதலால் நஞ்சினுந் தீயது நலமில் காமமே. -கந்தபுராணம் முந்தடிமை யேனை :- அருணகிரிநாத சுவாமிகள் வழிவழியாக முருகனிடத்தில் அடிமைத்திறம் பூண்டவர். இதனை அடியில் வரும் திருப்புகழ் வாக்குகள் வலியுறுத்துமாறு காண்க. “பழைய நினது வழியடிமையும் விளங்கும் படிக்கினி துணர்த்தி யருள்வாயே” -(அகரமுதலென) திருப்புகழ். “விராலி மலையில் விளங்கிய கந்த என்றுனை மகிழ்வொடு வந்திசெய் மைந்த னென்றனை வழிவழி யன்புசெய் தொண்டு கொண்டருள் பெருமாளே” -(கரதலமு) திருப்புகழ். “தஞ்ச மாகியெ வழிவழி யருள்பெறும் அன்பினா லுன தடிபுக ழடிமை” -(பஞ்சபாதக) திருப்புகழ். திந்தி திமிதோதி.......நடமாடும் :- மயிலினது நடனத்தின் சிறப்பை வர்ணிக்கின்றனர். குமாரக் கடவுள் ஊர்ந்துவரும் பசும்பொன் மயில், சக்ரவாளகிரி கிழிபடவும், கிரௌஞ்சசைலம் பிளக்கவும், மகாமேருகிரியும் அஷ்டகுலாசங்களும் உலகங்களும் குலுங்கவும், ஆதிசேடனது ஆயிரம் பணா மகுடங்களும் அதிரவும், சூரபன்மன் முதலிய அவுணர்கள் திடுக்கிட்டு நடுநடுங்கவும், நடிக்கின்ற திறத்தை அருணகிரியாரேயன்றி மற்று யாரே புகழவல்லார். |