“சக்ரப்ரசண்டகிரி முட்டக்கிழிந்துவெளி பட்டுக்ரவுஞ்ச சயிலந் தகரப் பெருங்கனக சிகரச் சிலம்புமெழு தனிவெற்பு மம்புவியுமெண் டிக்குத் தடங்குவடு மொக்கக் குலுங்கவரு சித்ரப்பதம் பெயரவே சேடன்முடி திண்டாட ஆடல்புரிவெஞ்சூரர் திடிக்கிட நடிக்கு மயிலாம்” -மயில்விருத்தம். அந்தண்மறை வேள்வி காவற்கார :- அந்தண் என்பதை யாகத்திற்கு அடைமொழியாகக் கொண்டு அழகியதும் குளிர்ந்ததுமாகிய யாகமென்பாரும் உளர். வேதவிதிப்படி அந்தணர்களால் நியமத்துடன் புரியப்படும் யாகத்திற்கு முருகப்பெருமான் காவல்காரராக இருந்து இடையூறுகளை நீக்கி இன்பத்தை நல்குகின்றனர். யாக ரக்ஷக வரலாறு காசிப முனிவர்க்கு அதிதியென்னும் பத்தினியிடந் தோன்றியவர்கள் ஆதித்யர் என்னும் தேவர்கள். திதி என்னும் பத்தினியிடம் தோன்றியவர்கள் தைத்தியர்கள். திதி மைந்தர்களாகிய அசுரர்களுக்கும் சுரர்களுக்கும் போர்த் தொடங்கி இருதிறத்திலும் பலர் மடிந்தனர். தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி திருமால் பாற்கடல் கடைந்து அமிர்தத்தை தேவர்களுக்கீந்து, அசுரகுலத்தை அடியோடு அழித்தனர். அஃதறிந்த திதியென்பாள் மிகவும் மனம் வருந்தி, காசிபரிடம் வந்து தன் குலநாசத்தைக் கூறி, “நாயக! என் சந்ததி வளருமாறு ஒரு புதல்வனைத் தந்தருள்வீர்” என்று முறையிட்டனள். காசிப முனிவர் “அன்புள்ளவளே! அஞ்சற்க, நின் அவாவின்படி குலவிருத்தி செய்ய ஒரு புதல்வனைத் தருகின்றோம்” என்று அருளுரை கூறி, குமாரக்கடவுள் வீற்றிருந்தருள்கின்ற |