இன்னணம் எம்பெருமான் அந்தணர்கள் மறைமுறை வழாது புரியும் யாகங்களைக் காத்தருள் புரிவதை நக்கீர தேவரும் கூறுமாறு காண்க. “மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒருமுகம்” -திருமுருகாற்றுப்படை செந்தமிழ் சொல்பாவின் மாலைக்கார :- செந்தமிழ்ப் பரமாசிரியனாம் செவ்வேட்பரமன் அடியார்களால் சூட்டப்படும் செந்தமிழ்ப் பாமாலைகளை அன்புடன் தரித்துக் கொள்ளுகிறார். “விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை மிகுந்தபல முடனோத மகிழ்வோனே” -(வரிக்கலை) திருப்புகழ். அண்டருபகார :- அண்டர்-தேவர். உபகாரன்- உபகரித்தவன். சூரபன்மனால் சிறைபட்டு 108 யுகங்களாக மிகவும் வருந்தி இனி உய்வு பெறுவோமோ என்று ஏங்கி இருந்த தேவர்களுடைய சிறையை மீட்டு, பொன்னாடு தந்து இன்ப வாழ்வில் இருக்க வைத்தவர் நம் குமாரமூர்த்தியே யாதலால் தேவசகாயனானார். சேவற்கார :- பக்தர்கள் இடையூறுற்று முறையிட்ட காலத்தில் முருகப் பெருமான் தான்வரும் குறிப்பை முன்னரே ஒலியால் புலப்படுத்தும் சேவற்கொடியைக் கரத்தில் தாங்கிக்கொண்டு வருவார். இதனை நம் அருணகிரியார் பிறிதோரிடத்தில் “முருகா! நான் கந்தா என்று அழைக்கும் போது தாங்கள் சிவந்த சேவற் கொடியைக் கரத்திலேந்திய வண்ணம் வரவேணும்” என்று கூறுவதை உற்றுநோக்கி உள்ளம் மகிழ்க. |