பக்கம் எண் :


212திருப்புகழ் விரிவுரை

கடவுளே? பூ மலர்களில் நிறைந்த வண்டுகள் அருமையான பண்களைப் பாடுகின்ற சிறப்பு குறையாத வள்ளி மலையில் எழுந்தருளியிருப்பவரே! கற்கண்டுபோல் இனிமை நிறைந்த அம்பிகையின் திருமுலைப்பாலை உண்டவரே! பகைவரைக் கண்டித்தவரே! வாசனை தங்கிய புயத்தையுடைய உபகாரியே! தூண் போன்ற வலிமை நிறைந்த அழகிய தோள்களையுடைய இளம் பூரணரே! கந்தக் கடவுளே! திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும் பெருமிதமுடையவரே! குளிர்ந்த தேனை யுண்டு வண்டுகள் அன்பு செய்கின்ற குளிர்ந்த மலர்மாலை சூடி மேகம் போல இருக்குங் கூந்தலையுடைய பொது மாதர்களிடம் ஆசை வைத்த மனத்தை யுடையவனாய் அவர்களுடைய செயலைப் பாராட்டிப் பேசுகின்ற நாயேனாகிய அடியேன், மண், நீர், நெருப்பு, காற்று, வெளி என்ற ஐம்பூத சேர்க்கையாலாகிய இப் பொய்யாகிய உடம்பிலிருந்து உயிர் நீக்கி, சுடுகாடு சென்று சேரா முன்னம் தேவரீர் எளியேன்முன் எழுந்தருளி அழகிய அடிமலரைத் தந்தருளுவீர்.

விரிவுரை

தண்டேனுண்டே வண்டு :-

தண், தேன் என்று பிரித்துக் கொள்க; குளிர்ந்த தேன் குளிர்ந்த மலர்களிலிருந்து வண்டுகள் தமது திறமையால் மிகவும் பாடுபட்டு சிறிது சிறிதாக எடுத்துக் கொண்டு வந்து சேகரிப்பது தேன். வண்டு இல்லையேல் தேன் இல்லை.

தாங்கள் உண்ணாமலும் ஒய்ந்து சிறிது நேரங்கூட இருக்காமலும், உழைத்து உழைத்துத் தேனைக் கொணர்ந்து சேர்க்கின்றன தேனீக்கள். அதனைப் பிறர் அபகரித்துக் கொள்ளுகின்றனர்.