பக்கம் எண் :


திருச்செந்தூர்213

உண்ணாமலும் உடுக்காமலும் பிறருக்குக் கொடுக்காமலும், சேர்த்து வைக்கின்ற லோபியினுடைய பொருளும் பிறரால் கவரப்படும்.

    “வைத்தீட்டி னாரிழப்பர் வான்தோய் மலைநாட
    உய்த்தீட்டுந் தேனீக் கரி.”
                   -நாலடியார்.

தண்டார் மஞ்சுக் குழல் மானார் :-

வண்டுகள் மகிழ்ந்து மொய்க்கின்ற குளிர்ந்த மலர் மாலைகளை வகை வகையாகக் கட்டித் தமது கூந்தலில் பொதுமகளிர் சூடிக்கொள்வார்கள்.

அந்தக் கூந்தல் கருமை நிறமாக இருப்பதனால் மேகம் போல் அழகாக இருக்கும்.

மஞ்சு-மேகம். மானார்-மான்போன்றவர்கள். வண்டார்-தண்டார் எனப் பதம் பிரித்துக் கொள்க.

தன்பாலார் நெஞ்சே கொண்டே :-

மனிதர்களாகிய நாம் இந்த மனித உடம்பை நமக்குத் தந்த இறைவனிடம் அன்பு வைக்கவேண்டும். இடையறாத இன்பத்தை வழங்குபவன் இறைவன். அத்தகைய எம்பெருமானிடம் அன்பு வைக்காது, இன்பம் போல் தோன்றும் துன்பத்தைத் தரும் பொதுமகளிர் பால் வைக்கின்றனர். அதனால் எத்தனை எத்தனைக் கேடுகளை யடைகின்றனர்.

சம்பாவஞ் சொற்றடி நாயேன் :-

சம்பவம்-என்பது சம்பாவம் என வந்தது. சம்பவம்-நிகழ்ச்சி. பொதுமகளிருடைய செயல்களைக் குறித்து அவர் பால் மயல் கொண்டோர் வியந்து நயந்து பேசி இன்புறுவர். அதிலே அவர்கட்கு மகிழ்ச்சி.

இறைவனுடைய திருநாமங்களைச் சொல்வதற்காகவே இந்த நா அமைந்துள்ளது.