பக்கம் எண் :


216திருப்புகழ் விரிவுரை

வழியைக் காட்டுகின்றார். அவர் பரகதிக்குச் சிறந்த வழிகாட்டி.

கொண்டாடும்போ கொண்டாடுஞ்சூர் கொன்றாய் :-

தன்னை யார் யார் கொண்டாடுகிறார்களோ அவர்களை யெல்லாம் மகிழ்ந்து ஆதரிப்பான் சூரபத்மன், தன்னைக் கொண்டாடுவதற்கென்றே பலரை வைத்திருப்பர் சிலர். அதனை இன்றுங் காணலாம்! சிலருக்குத் தன்னை கொண்டாடினால் அதில் ஒரு பெரு மகிழ்ச்சி, அறிஞர்கள்  தன்னை யாராவது புகழ்ந்தால் வருந்துவர் நாணுவர்.

மாலை நேரத்தில் மரத்தின் இலைகள் தலைகவிழ்ந்திருந்தன. அதனைக் கண்டு கூறவந்தார் புலவர். “தன்னைப் புகழக் கேட்ட மதிநலம் படைத்த மாண்புடைய ஒருவன் தலைக் கவிழ்ந்திருப்பது போல் இருக்கின்றன” என்கின்றார்.

   “தம்புகழ் கேட்டார் போல் தலை சாய்ந்து மரந் துஞ்ச’;
                                         -கலித்தொகை.

சூர்-துன்பம். துன்பத்தைச் செய்கின்றவன் சூரபன்மன்; அதனால் சூர் எனப்பட்டனன். இவன் 108 யுகங்கள் வாழ்ந்து அமரர்கட்கு அலக்கண் புரிந்தான். அதனால் அவனை மாய்த்தனர் குமாரக் கடவுள். இது மறக் கருணையென வுணர்க. குற்றஞ் செய்கின்ற மகனைத் தாய் அல்லது தந்தை அடிக்கின்றனர். மகன் மீது பகை காரணமாகவா அடிக்கின்றனர்? இல்லை. அவன் திருந்தி உய்யவேண்டும் என்ற கருணையினாலேயே தண்டிக்கின்றனர். அதுபோல் உயிருக்குத் தந்தையாகிய இறைவன் குற்றம் புரிந்தோரை உய்யும்பொருட்டுத் தண்டிக்கின்றனர். போற்றுபவர்க்கு அறக் கருணையும், அல்லார்க்கு மறக் கருணையும் புரிந்து ஆட்கொள்வது இறைவனுடைய இயல்பு.