எங்கும் வியாபியாய், சர்வஜீவசாட்சியாய் சர்வலோகங்களையுந் தனக்கு அங்கமாகக் கொண்ட அத்துவா மூர்த்தியாகிய நம் அறுமுகப் பெருமானார்க்கு இஃதோர் அருஞ்செயலோ? இது பற்றியே, “அநேஜதேகம் மநஸோ ஜவீயோ நைநத்தேவா ஆப்நுவன் பூர்வமர்ஷத் தத்தாவதோ (அ)ந்யாநத்யேதிதிஷ்டத் தஸ்மிந்நபோ மாதரிச்வா ததாதி!” என்று ஈசோபநிடதம் முழங்குகிறது.(அதாவது பதி ஒருவர், அவர் அசைபவரல்லர். மனத்தைப் பார்க்கினும் அதிக விரைவாகச் செல்பவர். ஐம்பொறிகளினும் மிக்க வேகமாக முன் செல்லும் இப்பதிப்பொருளைப் பொறிகளிலொன்றும் அடையமாட்டாது. அவர் திரமாக இருந்து வரைவாகச் செல்லும் மன முதலிய கருவிகளையுங் கடந்து செல்கிறார். காற்று அவருழையிருந்தே உயிர்களுக்கு உடலினசைவைக் கொடுக்கிறது என்பதேயாம்) எங்கும் முகங்களும், எவ்விடமுங் கண்களும், எவ்விடமுஞ் செவிகளும், எவ்விடமுங் கைகளும், எவ்விடமுந் திருவடிகளும், எவ்விடமும் வடிவமாகப் பெற்றார். ஒருவர்க்கன்றி ஏனையோரால் இக் காரியம் முடியாது. அத்துணைப் பெருஞ் சிறப்புடைய அகண்ட வியாபக சச்சிதானந்தப் பரம்பொருள் தாம் என்பதை விளக்குதற்கன்றோ நம் குமார குரு உலகையொரு நொடியில் வலம் வந்து அவ்வுண்மையை விளக்கியருளினார். இதனை, யசுர்வேத சுவேதாச்சுவதர உப நிடதக் கருத்துடையதாகிய, எங்கணும் பணிவதனங்க ளெங்கணும் விழிகள் எங்கணுந் திருக்கேள்விக ளெங்கணுங் கரங்கள் எங்கணுந் திருக்கழலடி யெங்கணும்வடிவம் எங்கணுஞ் செறிந்தருள் செயுமறுமுகத் திறைக்கே; என்ற கந்த புராணத் திருவாக்காற் காண்க. இங்ஙனஞ் சண்முகப் பிரபு அகில உலகையும் வலம் வந்து கயிலை வருமுன், கணபதி சிவத்தை விட்டு உலகம் |