மிகவும் உபசரித்து அவருடன் மிக்கதோர் நட்பு கொண்டு, தமது பண்டாரத்திருந்த செல்வமுழுவதையுங் கொடுத்து ஆரூருக்கு அனுப்பினார்; அவரை மறவாது அரசு செய்து வந்தார். பின்னர் ஒரு சமயம் அந்திவண்ணனைத் தூது கொண்ட சுந்தரமூர்த்தி நாயனார் கொடுங்கோளூருக்கு வந்து சேரமான் பெருமாள் நாயனாருடன் எழுந்தருளியிருந்தார். பல நாளாயின. பின் சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக்களஞ் சென்று சுவாமி தரிசனஞ் செய்துகொண்டு இருந்தபோது, திருக்கைலாயத்தினின்றும் சிவபெருமானால் அனுப்பப்பட்ட வெள்ளை யானையின்மேல் ஏறி, “இந்திரன், மால், பிரமன், எழிலார் மிகு தேவர் எல்லாரும் வந்து எதிர் கொள்ளச் செல்லும் போது, தனது அருமைத்தோழராகிய சேரமான் பெருமாள் நாயனாரை நினைத்தார். நீராடிக் கொண்டிருந்த சேரமான் பெருமாள் நாயனார், தம்பிரான் தோழருடைய நினைவை யுணர்ந்து உடனே அருகிலே நின்ற குதிரைமீது ஏறி, திருவஞ்சைக்களஞ் சென்று, ஐராவதமூர்ந்து ஆகாயத்திற் செல்லும் ஆரூரடிகளைக் கண்டு, தாம் ஏறிய குதிரையின் செவியிலே ஐந்தெழுத்தை ஓதியருளினார். உடனே அக்குதிரை ஆகாயத்திற்பாய்ந்து, நம்பியாரூரருடைய வெள்ளை யானையையடைந்து, அதனை வலஞ்செய்து அதற்கு முன்னாகச் சென்றது. சேரமான் பெருமாள் நாயனாருடைய படை வீரர்கள். குதிரை மேற்செல்லும், அந்நாயனாரைத் தங்கள் கண்ணுக்குப் புலப்படும் எல்லை வரைக்கும் ஆகாயத்திலே கண்டு, பின் காணாமையால் மிகுந்த திடபக்தியால் உடைவாள் கொண்டு தங்கள் உடம்பை வீழ்த்தி வீரயாக்கையைப் பெற்றுப் போய், சேரமான் பெருமாள் நாயனாருக்கு முற்பட்டு, அவரை வணங்கிக் கொண்டு சென்றார்கள். சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும், உள்ளுவார் வினையகற்றும் வெள்ளியம் பொருப்பை நண்ணியவுடனே குதிரையினின்றும், யானையினின்றும் இறங்கி, பல வாயில்களையுங் கடந்து |