பக்கம் எண் :


பழநி13

திருவணுக்கன் திருவாயிலையடைந்தார்கள். அங்கே சேரமான் பெருமாள் நாயனார் தடைப்பட்டு நிற்க, சுந்தரமூர்த்தி நாயனார் உள்ளேபோய் சிவசந்நிதியில் விழுந்து வணங்கி எழுந்து துதித்து நின்று, “எந்தையே! தேவரீருடைய திருவடிகளை அடையும் பொருட்டுச் சேரர் கோன் திருவணுக்கன் திருவாயிலையடைந்து நிற்கின்றார்.” என்று விண்ணப்பஞ் செய்தார். புரிசடைக் கடவுள் புன்முறுவல் செய்து சேரமான் பெருமாளை அழைப்பிக்க, அவர் ஆராத அன்புடன் விரைந்து சென்று பன்முறை விழுந்து வணங்கித் துதித்து நின்றார். செம்மேனிப் பெம்மான் திருமுறுவல் கொண்டு “இங்கே நாம் உன்னை அழையாதிருக்க, நீ வந்தது என்னை?” என்று அருளிச்செய்ய, சேரமான் பெருமாள் நாயனார்  கைகூப்பி “பண்ணவர் போற்றுங் கண்ணுதற் கடவுளே! சுந்தர மூர்த்தி நாயனாருடைய திருவடிகளைத் துதித்து, அவர் ஏறிய வெள்ளை யானைக்கு முன் அவரை சேவித்துக் கொண்டு வந்தேன், தேவரீர் பொழிகின்ற பெருங்கருணை வெள்ளம் அடியேனை இங்கு கொண்டு வந்து ஓதுக்கியதால் திருமுன் வரப்பெற்றேன்; மலைமகள் நாயக! இனி ஒரு விண்ணப்பம் உண்டு; மாலயனாதி வானவர்களாலும், மாதவர்களாலும்,  மறைகளாலும் துதிக்கப்படுதற்கு அரிய பெருமையுடைய தேவரீர் மீது அன்பினாலே தேவரீரது திருவருள் துணைகொண்டு திருவுலாப் பாடினேன்; அதனைத் தேவரீர் திருச்செவி சாய்த்தருள வேண்டும்” என்று விண்ணப்பஞ் செய்தார். அப்பொழுது சிவபெருமான், "சேரனே! அதனைச் சொல்லு" என்று திருவாய் மலர்ந்தனர். சேரமான் பெருமாள் நாயனார் உடனே திருக்கைலாய ஞானவுலாவை ஆசுகவியாகப் பாடிப் பெருமானைக் கேட்பித்தார். அரனார் மகிழ்ந்து அருள்செய்து, “நம்முடைய கணங்களுக்கு நாதனாய் இரு” என்று அருள் புரிந்தார். சேரமான் பெருமாள் நாயனார் சிவகண நாதராகிச் சிவமூர்த்தியைச் சேவிப்பராயினர். அவர் அருளிச் செய்த ஞானவுலாவை அங்கு அன்று கேட்ட