பதவுரை போதகம் தரும் கோவே-ஞான உபதேசத்தைத் தருகின்ற தலைவரே! நம ஓ நம-வணக்கம், வணக்கம்; நீதி தங்கிய தேவா-நீதிக்கு இருப்பிடம் ஆகிய சோதியே! நம ஓ நம-வணக்கம், வணக்கம்; பூதலம்தனை ஆள்வாய்-இப் பூ மண்டலத்தை ஆளுகின்றவரே! நம ஓ நம-வணக்கம், வண்ணம்; பணியாவும் பூணுகின்ற பிரானே-அணிகலன்கள் அனைத்தையும் அணிகின்ற பெருமானே! நம ஓ நம-வணக்கம், வணக்கம்; வேடர் தம் கொடி மாலா-வேடர் குலத்தில் அவதரித்த கொடி போன்ற வள்ளியம்மையாரிடம் அன்புடையவரே! நம ஓ நம; வணக்கம், வணக்கம்; போது அவன் புகழ் ஸ்வாமீ-தாமரை மலரில் வாழ்கின்ற பிரமதேவர் துதி புரிகின்ற சாமியே! நம ஓ நம-வணக்கம், வணக்கம்; அரிது ஆன வேத மந்திர ரூபா-அருமையான வேத மந்திரங்களின் வடிவம் ஆனவரே! நம ஓ நம-வணக்கம், வணக்கம்; ஞான பண்டித நாதா- மெய்ஞ்ஞானப் புலவரே! நம ஓ நம-வணக்கம், வணக்கம்; வீர கண்டை கொள்தாளா-வீரக் கழலையணிந்துள்ள திருவடியை யுடையவரே! நம ஓ நம- வணக்கம், வணக்கம்; அழகு ஆன மேனி தங்கிய வேளே-அழகு நிறைந்த திருமேனியுடைய உபகாரியே! நம ஓ நம-வணக்கம், வணக்கம்; வான பைதொடி வாழ்வே-தேவ வுலகில் வளர்ந்த பசுமை தங்கிய வளையல் அணிந்த தெய்வயானையம்மைக்குக் கணவரே! நம ஓ நம-வணக்கம் வணக்கம்; வீறு கொண்ட விசாகா-வெற்றி நிறைந்த விசாக மூர்த்தியே! நம ஓ நம-வணக்கம், வணக்கம்; பாதகம் செறி-தீவினை நிறைந்த, சூராதி மாளவெ-சூரபன்மன் முதலிய அசுரர்கள் இறக்குமாறு, கூர்மை கொண்ட அயிலாலே போராடியே- கூரிய வேலாயுதத்தால் போர் புரிந்து, பார அண்டர்கள் வான்நாடு சேர் தர- பெருமை பொருந்திய தேவர்கள் வானுலகில் சேருமாறு, அருள்வோனே-அருள் புரிந்தவரே! பாதி சந்திரனே சூடும் வேணியர்-பாதி நிலவைத் தரித்த சடை முடியினரும், சூல சங்கரனார்-திரிசூலத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் சுகத்தைச் செய்பவரும், கீதநாயகர்-இசைத் தலைவரும், பார திண்புயமே சேரு சோதியர்-வலிமையுந் திண்மையுங் கொண்ட புயாசலங்களை யுடைய ஒளிப்பொருளும், கயிலாயர்-திருக்கயிலையில் வாழ்பவரும், ஆதிசங்கரனார்- முதன்மையான சிவபரம்பொருளும் ஆகிய சிவபிரானுடைய, பாக மாது உமை- இடப்பாகத்தில் இருக்கும் உமையம்மையும், கோல அம்பிகை-அழகிய அம்பிகையும், மாதா மநோமணி-எல்வுலகங்கட்கும் அன்னையும் மனோன்மணியும், ஆயி-அன்னையும், சுந்தரி-அழகியும், தாயான நாரணி- உயிர்கட்குத் தாயான அன்புக்கு உறைவிடமானவளும், அபிராமி-மிக்க அழகியுமாகிய பார்வதி தேவி, ஆவல் கொண்டு விறாலே சீராடவே- அன்புகொண்டு பெருமையுடன் சீராட்ட, கோமளம் பல சூழ் கோயில் மீறிய- அழகு பலவாக அமைந்த திருக்கோயில் சிறந்து விளங்கும். ஆவினன்குடி |