பக்கம் எண் :


பழநி17

சீராட்ட பல அழகுகள் சூழ்ந்துள்ள திருக்கோயில் சிறந்த விளங்கும், திரு ஆவினன்குடியில் வீற்றிருக்கும் தேவர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே! அடியேனுக்கு உமது திருவருளைத் தந்து உதவுவீர்.

விரிவுரை

போதகந் தரு கோவே:-

முருகவேள் பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்குக் குருமூர்த்தமாகி முன்தோன்றி, ஞான உபதேசம் புரிந்து அருளுவார். அருணகிரிநாதருக்கு அவ்வண்ணம் குருபரனாக உபதேசித்தருளினார்.

    “எட்டிரண்டு மறியாத என் செவியில்
    எட்டிரண்டும் இதுவா மிலிங்கமென
    எட்டிரண்டும் வெளியா மொழிந்தகுரு முருகோனே”

                       -(கட்டி முண்ட) திருப்புகழ்

இவ்வாறு தனக்கு முருகன் குருவாக நின்று உபதேசித்த திறத்தை அருணகிரிநாதர் பலப்பலவாகப் பாராட்டிக் கூறியிருக்கின்றார். “குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” என்று கூறி கந்தரநுபூதியை முடிக்கின்றார். இதன் கருத்தென்ன? தனக்கு முன்னமேயே அப்பன் குருவாக வந்து அருள் புரிந்தனன். அந்த வண்ணம் மற்ற உயிர்கட்கும் “குகனே நீ குருவாக வந்து அருள் செய்” என்று வேண்டுகிறார். “அப் பரமனைக் குருவாக நினைத்துத் தியானிக்காதவர் உண்மைப் பொருளை யுணரமாட்டார்” என்றுங் கூறுகின்றார்.

   “முருகன் தனிவேல் முனிநங் குருவென்
    றருள்கொண்டறியா ருறியுந் தரமோ?”
      -அநுபூதி (13)

அண்மையில் உண்மையின் உருவான பாம்பன் அடிகள் பிரப்பன் வலசை யென்ற ஊரில், மயானத்தில் குழியை யுண்டாக்கி, அதில் அமர்ந்து 35 நாட்கள் தன்னை மறந்து நிஷ்டை கூடியிருக்க, அவருக்கு முருகன் குருவாக வந்து உபதேசித்தருளினார்.