வீரவாகு தேவரைத் தூது ஏவி, அரச முறைப்படி போர் புரிந்து அவனை மாய்த்தருளினார். பூதலந்தனை யாள்வாய்:- இம் மண்ணுலகத்தையும் முருகன் உக்கிரப் பெருவழுதியை அநுஷ்டித்து ஆண்டு அருளினார். பணியாவும் பூணுகின்ற பிரானே:- பணி: ஆபரணம். முருகன் இளம்பூரணன். வெள்ளி மலையையும் பொன்மலையையும் உடைய சிவகுமாரன் எல்லா அங்கங்களிலும் எல்லா அணிகலன்களையும் அணிந்து கொண்டிருக்கிறான். இனி, பணி என்ற சொல்லுக்குப் பாம்பு எனக் கொண்டு ‘நாகாபரணன்’ என்றும் அமையும். பிரியான் என்ற சொல்லின் மருஉ-பிரான் எனக் கூறுவர் பாம்பனடிகள். உயிர்களை விட்டுப் பிரியா துறையும் பெற்றியான் என்பது அதன் பொருள். வேடர்தாங்கொடி மாலா:- மால்-அன்பு. வள்ளிபிராட்டி அதிக தவஞ் செய்தவள் என்று அம்மையை அறிவிக்கின்றார் அருணகிரிநாதர். மிக்க தவம் செய்த அம்மான் பெற்ற அம்மான் பால் எம்மான் அன்பு கொண்டு அருள் புரிந்தான். போதவன் புகழ் சாமி:- போதவன்-பிரமன். முதல் எழுத்துக்குப் பொருள் கூறமாட்டாது சிறை புகுந்த பிரமதேவர், முருகனைத் துதி செய்து நலம் பெறுகின்றார். “திருமருவு புயன் அயனொடு அயிராவதக் குரிசில் அடிபரவு” -(குமரகுருபர முருககுருகனே) திருப்புகழ் அரிதான வேத மந்திர ரூபா:- வேத மந்திரங்கள் மிக்க அருமை வாய்ந்தவை. அம்மந்திரங்களையே தனக்கு வடிவமாகக் கொண்டு விளங்குகின்றான் முருகன். |