ஆத ரம்பயி லாரூரர் தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மூதேறி லையிலேகி ஆதி யந்தவு லாவாசு பாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ஆவி னன்குடிவாழ்வன தேவர்கள் பெருமாளே பதவுரை ஈதலும்-இரப்பவர்க்குக் கில்லையென்னாது ஈந்து உதவி செய்யும் ஈகையும், பல கோலால பூசையும்-பற்பலவாறு கோலாகலமாக (ஆடல் பாடல் விழா மேளதாளம் முதலியவற்றுடன் கூடி)ச் செய்யும் பூஜையும், ஓதலும்-வேதம் ஆகமம் முதலிய முத்தி நூல்களையும் தேவாரம், திருவாசகம் முதலிய முத்தி நூல்களையும் ஓதியுணருந் தன்மையும், குண ஆசார நீதியும்-நற்குணம் நல்லொழுக்கம் சிவநெறியில் நிற்கும் நன்னிலை இவைகளும், ஈரமும்- கருணையும், குரு சீர்பாத சேவையும்-சற்குரு மூர்த்தியினுடைய சிறந்த சரணாரவிந்தங்களைச் சேவித்து தொண்டு புரிதல் முதலிய நன்னெறிகளை, மறவாத-ஒரு காலத்திலும் மறவாத தன்மையுடைய நல்லவர்கள் வாழுகின்றதும்- ஏழ்தலம் புகழ்-ஏழு தீவினர்களாலும் புகழப்படுகின்ற, காவேரியால் விளை- காவேரி நதி பாய்தலினால் வளம்பெருவதுமாகிய, சோழ மண்டலமீது-சோழ மண்டலத்தின் கண், மனோகர-மனத்தைக் கவரும் வளப்பத்தையுடையதான, ராஜ கெம்பீர நாடு ஆளும் நாயக-தலைவரே! வயலூரா! (அந்த ராஜ கெம்பீர வளநாட்டின் மத்தியிலுள்ள) வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளவரே! ஆதரம்பயில்-அன்பு பொருந்திய, ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டு-சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய நட்பை மிகவும் நெருக்கமாகக் கொண்டு, அவரோடே-அவா, (ஆரூரர்) திருக்கைலாயத்திற்குப் புறப்பட்டபோது அவருடனேயே, முன்நாளினில்-முன்னொரு நாளில், ஆடல் வெம் பரிமீது ஏறி- ஆடுவதும் போருக்குரிய உக்கிரமுடையதுமாகிய புரவியின் மீது ஏறிக் கொண்டு, மா கயிலையில் ஏகி-பெருமை பொருந்திய திருக்கைலாய மலைக்குச் சென்று, ஆதி அந்த உலா ஆசு பாடி-அந்தாதியாகவுடைய ஆதி கைலாச உலாவை ஆசு கவியாகப் பாடியருளிய, சேரர் கொங்கு வைகாவூர் ந(ன்) நடாதில்-சேரமான் பெருமாள் நாயகர் அரசு செய்யும் பாக்கியத்தைப் பெற்ற கொங்கு தேயத்திலுள்ள நல்ல காவூர் நாட்டின் கண் விளங்கும், ஆவினன் குடி வாழ்வான்-திருவாவினன் குடி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள, தேவர்கள் பெருமாளே-தேவர்களுக்கெல்லாந் தேவராகிய பெருமையுடையவரே! நாத விந்துகலை ஆதீ-நாதம் விந்து கலை என்பவைகட்கு முதலாக நிற்பவரே! நமோநம-நமஸ்காரம் நமஸ்காரம், வேதமந்த்ர சொரூபா-வேத மந்திரங்களின் வடிவமாக விளங்குபவரே! நமோநம-நமஸ்காரம் நமஸ்காரம், ஞானபண்டித ஸ்வாமீ-ஞான வல்லுநரே, நமோநம-நமஸ்காரம் நமஸ்காரம், வெகு கோடி நாம சம்பு குமார-அநேக கோடி திருநாமங்களையுடைய சிவ பெருமானது திருக்குமாரரே! |