பக்கம் எண் :


20திருப்புகழ் விரிவுரை

ஞான பண்டித நாத:-

மெய்ஞ்ஞானப் புலவர்கட்கெல்லாம் முருகன் தலைமை பெற்றுத் தண்ணருள் புரிகின்றான்.

வீர கண்டை சொல்தாளா:-

இனி ஞான மூர்த்தியான முருகன் வீரமூர்த்தி யாகவும் விளங்குகிறான். வீரர்கள் பாதத்தில் தரிப்பது வீரக்கழல். அதனை எம்பெருமான் அணிந்திருக்கிறான். அது அவனை வீரமூர்த்தி என்று அடையாளம் காட்டுகின்றது.

“எழுதரிய அறுமுகமும் அணிநுதலும் வயிரமிடை
    இட்டுச் சமைந்த செஞ்சுட்டிக் கலன்களும் துங்கநீள்பன்
னிருகருணை விழிமலரும் இலகுபதி னிருகுழையும்
    ரத்னக் குதம்பையும் பத்மக் கரங்களும் செம்பொனூலும்
பொழிபுகழு முடைமணியு மரைவடமு மடியிணையும்
    முத்தச் சதங்கையும் சித்ரச் சிகண்டியும் செங்கைவேலும்
முழுது மழகிய குமர”
        -(விழையுமனி) திருப்புகழ்

வானபைந்தொடி வாழ்வே:-

தேவவுலகில் வளர்ந்தவர் தெய்வயானை யம்மையார். அவர் பசிய வளையல்களை அணிந்துள்ளார். அது நித்ய மங்கலத்தைக் குறிக்கின்றது. அவருக்கு வாழ்வு தருகின்ற பெருமான் முருகன்.

அழகான மேனி தங்கிய வேளே:-

முருகன் என்ற சொல்லுக்கே அழகன் என்பது பொருள். முடிமுதல் அடிவரை மிக்க அழகுள்ள தெய்வம் குமார தெய்வம்.

வீறுகொண்ட விசாகா:-

விசாக நட்சத்திரம் மிக்க ஒளியுள்ளது. அக்கினி மயமானது. அதுபோன்ற பெருமையுடையவன் முருகன். அதனால் விசாகன் என்று பெரியவர்கள் துதிப்பார்கள்.

பாதகஞ் செறி சூராதி மாள:-

அமரரை அளவுக்கு மேல் இடர்ப்படுத்தினான் சூரபன்மன். தனக்கு வாழ்வும் வரமும் வழங்கிய சிவகுமாரனை வணங்காதும் மதியாதும் தருக்குற்றான்.