பக்கம் எண் :


பழநி21

இத்தகைய தீங்குகள் பல புரிந்த அவனை அவன் குலத்துடன் வேல் கொண்டு மாய்த்து, தேவர்களைத் தங்கள் விண்ணுலகில் குடியேறுமாறு எம்பெருமான்- குமாரன் அருள் புரிந்தான்.

பாதி சந்திரனே சூடு வேணியர்:-

சிவபெருமான் சந்திரனைத் தரித்திருப்பது அப்பெருமானது கருணையைக் குறிக்கின்றது.

சூல சங்கரனார்:-

சூலம் மூன்று கிளைகளாக இருக்கும். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, என்ற மூன்று சக்திகட்கும் தலைவர் என்பதைக் குறிக்கின்றது.

சம்-சுகம். கரம்-செய்வது. சுகத்தைச் செய்கின்றவன் சங்கரன், உயிர்கட்குச் சதா சுகத்தையே செய்து கொண்டிருக்கிறான்.

கீத நாயகர்:-

இசை ஒரு சிறந்த கலை. அது உயிர்களை உவக்கச் செய்யும்; பயிர்களையுந் தழைக்கச் செய்யும்; கல்லையுங் கனிவிக்கும்; மதயானையின் மதத்தை அடக்கும்; பாலையைச் சோலையாகச் செய்யும் பேராற்றல் படைத்தது. இசை, ஓடும் மனத்தை ஒருமைப் படுத்தும் அந்த இசைக்குத் தலைவர் சிவபெருமான்.

பாரதிண்புய மேசேரு சோதியர்:-

சிவபெருமானுக்குப் பத்துத் தோள்கள்; அவைகள் பத்துத் திசைகளையுந் தாங்குகின்ற வலிமையுடையவை.

அபிராமி ஆவல்கொண்டு விறாலேசீராட:-

சிவபிரான் தன் பாகத்தில் வைத்த உமாதேவியார் மிக்க ஆவலுடன் இளங் குழவியாகிய முருகனைத் தாலாட்டிச் சீராட்டுகின்றார்.

கோமளம் பல சூழ் கோயில்:-

திருவாவினன்குடியில் விளங்குங் கோயில் பற்பல அழகுகளுடன் கூடியது. கண்களையும் கருத்தையும் ஒருங்கே கவர்வது.