வாழுமாறு முன்னாள் உண்டருளிய நீலகண்டராகிய மகாதேவர் தந்தருளிய முருகக் கடவுளே! பிரமனுடன் வாது புரிந்து பிரணவ மொழிக்குப் பொருள் சொல் என்று வினாவுதலும், “வாராது” என்று அவன் கூற, அவனுடைய ஆணவம் அழியுமாறு சிறையில் இட்ட வேலாயுதரே! சூரியனுடைய ஒளி ஒழியாது வீசுகின்ற கோபுரம் விளங்குவதும், மகாலட்சுமி விரும்பி உறைவது மாகிய, திருவாவினன்குடியில் எழுந்தருளியிருப்பவரே! தேவர் தலைவர் போற்றும் பெருமிதம் உடையவரே! யானையை யொத்த பெரிய தனங்களின் மீது அணிந்துள்ள அணிகலமாகிய முத்து மாலை அரிய ஒளி வீசவும், இளந்திங்களை யொத்த சிறந்த முகத்தில் அழகு மிகுதியாக விளங்கவும், காண்பவர்க்கு இன்னலைத் தரும் சேல்மீன் போன்ற நீளமான கண்கள் பொன்னோலை தங்கிய நீண்ட காதுகளைத் தாவி நிற்கவும், தேவ அமுதம் போன்ற வாயிதழில் அமுதம் ஊற்றெடுக்கவும், தோரணத்திற்கு உதவும் குலையுடன் கூடிய வாழையையொத்த தொடை மீது நின்ற இடை நூல் போல இருக்கவும், மயில் என்னுமாறு உலாவி அழகிய அன்னம் போன்ற நடையுடைய பெண்களின் வஞ்சனைச் செயலை மகாமாயையே உருவங்கொண்டு நிற்கின்றது என்று ஆய்ந்து அறியும் அறிவு உண்டாகுமாறு அடியேனுடைய உள்ளத்துள் தேவரீர் அருள் புரிய வேண்டும். மானார் தோகந்தனை மாமாயையே வடிவாக நின்றது:- முத்தி நலம்பெற விழைவார்க்கு ஆசை தடையாக நிற்பது. அந்த ஆசையில் பெண்ணாசை பிறவிதொறும் இடைவிடாது தொடர்ந்து வந்து பற்றுவது. மேலும் விலைமகளின் மேல் உள்ள ஆசை மிகப் பெரிய கேட்டினைப் புரியவல்லது. ஆ! அது மாயையின் வடிவே என்ற திருவருள் துணையால் தேர்ந்து, தெளிந்து, அறவே நீக்கி, உய்வு பெற வேண்டும். கடல் கடப்பார்க்குத் தோணி துணை புரிதல் போல, காமக்கடல் கடப்பார்க்கும் முருகன் கருணை புனையாகும். அருணகிரியார் இந்தக் காமக் கடலை கடந்தவர். |