கடத்திற் குறத்திப் பிரான் அருளால் கலங்காத சித்தத் திடத்தில் புனையென யான் கடந்தேன் சித்ர மாதர் அல்குல் படத்தில் கழுத்தில் பழுத்தசெவ் வாயில் பனையில் உந்தித் தடத்தில் தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே. -கந்தரலங்காரம் (29) காரணந்தனை ஓரா நிசாசரர்:- தாய் தந்தையர்கட்கு மக்கள் அனைவரிடமும் பட்சம் ஒன்று போல் இருக்கும். ஒரு பிள்ளைமேல் விருப்பு, மற்றொரு பிள்ளைமேல் வெறுப்பு இருக்காது. அதுபோல் இறைவனுக்கு வானவரும் தானவரும் மக்கள்தானே. வானவர் பொருட்டு தானவரை அழிப்பது பட்சபாதம் ஆகாதா என்ற ஐயம் எழுவது இயல்பு. மெலிந்த மகனை வலிந்த மகன் அடிப்பானாயின் தந்தை மெலிவுற்ற மகன் பக்கம் சார்ந்து வலிவுற்ற மகனைத் தண்டிப்பார். அது பட்சபாதம் ஆகாது. வன்மை குறைந்த வானவர்களை சூரபன்மன் நெடிது காலம் அளவுக்கு மேல் சிறையில் அடைத்துத் தண்டித்தான். சிவகுமாராகிய முருகவேள் தேவர் சிறை மீட்குமாறு வந்தருளினார். நான் என்ற அகந்தையால் கண்மூடப் பெற்ற சூரபன்மன் அக்காரணம் அறியாது. விமலன் வேற்படையால் விரைந்து அழிந்தான். கார்விடந்தனை.................மகாதேவனார்:- சிவபெருமானுடைய அளப்பருங் கருணையை இந்த அடி இனிது வெளிப்படுத்துகின்றது. தேவர்கள் பாற்கடல் கடைந்தார்கள். அங்ஙனம் கடையுமுன் தேவதேவராகிய சிவபெருமானிடம் அறிவிக்காமலும், அவருடன் ஆலோசிக்காமலும், அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்தார்கள். எதிர்பார்த்தது அமுதம்; அதில் வெளிப்பட்டது ஆலகாலவிடம். எல்லோரும் பிடித்தார்கள் ஓட்டம். மனத்தில் ஏற்பட்டது பெரிய வாட்டம். அருகில் சென்ற நாராயணர் திருமேனி கருகி விட்டது. ஒருவரையொருவர் பின் தள்ளிக்கொண்டு ஓடினார்கள். கைலையை நாடினார்கள். இறைவனுடைய புகழைப் பாடினார்கள். |