இறைவன் அமரரை அப்போது முனியாது, இனி யாதுங் குறையில்லை யென்று அவர்கள் அகமகிழுமாறு, அவ்விடத்திலேயே அவ்விடத்தையுண்டு அமரர்கட்கு அமுதம் அருளி, அவர்கட்கு வந்த கண்டத்தை நீக்கிக் காள கண்டராக விளங்கினார். இதனை ஆதி சங்கராசாரியார் தமது சிவானந்த லகரி என்ற நூலில் வியந்து கூறுகின்றார். நாலம்வா பரமோபகாரகம் இதம் த்வேகம் பசூநாம்பதே பச்யந் குக்ஷிகதான் சராசரகணான் பாஹ்யஸ்திதான்ரக்ஷிதும்| சர்வாமர்த்ய பலாய நௌஷத மதிஜ்வாலாகரம் பீகரம் நிக்ஷிப்தம் கரளம்களே நகளிதம் நோத்கீர்ணமேவத்யா|| பசூநாம்பதே-ஜீவர்களுக்கு ஈசனே, குக்ஷிகதான்-வயிற்றை அடைந்தவர் களாயும், பாஹ்யஸ்திதான்-வெளியில் இருப்பவர்களாயும் இருக்கின்ற, சராசரகணான்-அசைகின்ற உயிர்கள், அசையாத செடி கொடி மரம் முதலிய உயிர்களின் கூட்டங்களை, ரக்ஷித்தும்-காப்பாற்றுமாறு, பச்யன்- பார்க்கின்றவனாகி, த்வயா-உன்னால், அதிஜ்வாலாகரம்-மிகுந்த ஜ்வாலை வீசுவதும், பீகரம்-பயத்தைச் செய்வதும் ஆகிய கரளம்-பாற்கடலில் எழுந்த விஷமானது, சர்வாமர்த்ய பலாய நௌஷதம்-எல்லாத் தேவர்களுடைய ஓட்டத்துக்கும் நோய்க்கும் மருந்தா யிருக்கும்படி, களே-கழுத்தில், நிக்ஷிப்தம்- வைக்கப்பட்டது, நகளிதம்-உள்ளே விழுங்கப்படவுமில்லை; நோத்கீர்ணமேவ- வெளியில் உமிழப்படவுமில்லை; பரம உபகாரம்-பெரிய உபகாரமாகிய, இதம்- இந்த, ஏகத்து-ஒன்றே, நாலம் வா-அன்பையும், அருளையும், ஆற்றலையும் அறியப் போதாதா? போதும். மாலெங்கே? வேதனுயர் வாழ்வெங்கே? இந்திரன்செங் கோலெங்கே? வானோர் குடியெங்கே?-கோலஞ்செய் அண்டமெங்கே? அவ்வவ் அரும்பொருள் எங்கே? நினது கண்டமங்கே நீலமுறாக் கால் -வள்ளலார் ஆரணன்தனை வாதாடி:- ஆரணன்-பிரமதேவன்; வேதத்திலே சில பகுதிகள் ஆரண்யத்தில் ஓத வேண்டியவைகாளக விருப்பதனால், அது ஆரணம் எனப்பட்டது. பிர்ஹதாயண்யகம் முதலிய பகுதிகளை நோக்குக. வேதத்தில் வல்லவன் பிரமதேவன். அப்பிரமாவுக்கு ஒரு சமயம் ஆணவம் மேலிட்டது. பதவியில் உள்ளவர்களை |