அப்பதவி மோகம் சில சமயம் அவ்வாறு மயக்கும், பிரமதேவன் தருக்குற்று நின்ற சமயம், கந்த நாயகன் ஓம் என்னும் தனி மந்திரத்தின் தத்துவப் பொருளை விளக்கிக் கூறுமாறு கேட்டருளினார். அதனைக் கூற அறியாது வேதன் வேதனையுற்றான். நாலு தலைகளும் நாலுதலைகளாமாறு (நாலுதல்-தொங்குதல்) குட்டிச் சிறையிருத்தி, முத்தொழில்களையும் முருகவேளே புரிந்து, மூவர்க்கும் முத்தொழில்களுக்குந் தாமே தனிப்பெருந் தலைவர் என்பதை உலகம் உணர்ந்து உய்ய உணர்த்தியருளினார். கருத்துரை சூரசங்காரரே! சிவகுமாரரே! திருவாவினன்குடித் தேவதேவரே! மாதர் மயக்கந் தெளிய அருள்புரிவீர். மூல மந்திர மோதலிங்கிலை யீவ திங்கிலை நேய மிங்கிலை மோகன மிங்கிலை ஞான மிங்கிலை மடவார்கள் மோக முண்டதி தாக முண்டப சார முண்டப ராத முண்டிடு மூக னென்றொரு பேருமுண்டருள் பயிலாத கோல முங்குண வீனதுன்பர்கள் வார்மை யும்பல வாகிவெந்தெழு கோர கும்பியி லேவிழுந்திட நினைவாகிக் கூடு கொண்டுழல் வேனை யன்பொடு ஞான நெஞ்சினர் பாலிணங்கிடு கூர்மை தந்தினி யாளவந்தருள் புரிவாயே பீலி வெந்துய ராவி வெந்துவ சோகு வெந்தமண் முகர் நெஞ்சிடை பீதி கொண்டிட வாது கொண்டருள் எழுதேடு பேணி யங்கெதி ராறு சென்றிட மாற னும்பிணி தீரவஞ்சகர் பீறு வெங்கழு வேற வென்றிடு முருகோனே |