பக்கம் எண் :


28திருப்புகழ் விரிவுரை

ஆலமுண்டவர் சோதி யங்கணர்
    பாக மொன்றிய வாலை யந்தரி
    ஆதி யந்தமு மான சங்கரி             குமரேசா
  ஆரணம்பயில் ஞான புங்கவ
    சேவ லங்கொடி யான பைங்கர
    ஆவினன்குடி வாழ்வு கொண்டருள்   பெருமாளே.

பதவுரை

பீலிவெந்து-(கூன்பாண்டியனது கொடிய வெப்பு நோயை நீக்கும் பொருட்டு சமணர்கள் மந்திரத்துடன் அவன் உடம்பைத் தடவிய) மயிற் பீலியானது வெந்து நீறாகவும், உயர் ஆவி வெந்து-சிறந்த உயிரும் கருகவும், அசோகு வெந்து-(அவர்கள் ஏந்தியுள்ள) அந்த அசோகக் கொத்துகள் வேகவும், அமண் மூகர் நெஞ்சு இடை-(சிவமந்திரஞ்சொல்லாத) ஊமைகளாகிய சமணர்கள் உள்ளத்தில், பீதிகொண்டிட-பயங்கரத்தை யடையுமாறும், வாது கொண்டு- சிவசமயமே மெய்ச் சமயம் என்று வாதஞ்செய்து,   அருள் எழுது ஏடு- அருள்மயமான தேவாரப் பாடலை எழுதிய திரு ஏடானது, பேணி அங்கு எதிர் ஆறு சென்றிட-அந்த வைகையாற்றின்கண் திருவருளை விரும்பி நீரை எதிர்த்து ஏகவும், மாறனும் பிணிதீர-பாண்டியன் சுரப் பிணியும் கூனும் நீங்கியுய்யவும், வஞ்சகர்-வஞ்சனையைச் செய்கின்ற சமணர்கள், பீறு வெம் கழு ஏற வென்றிடு-உடம்பைக் கிழிக்கின்ற வெவ்விய கழுவில் ஏறவும் திருஞான சம்பந்தராக வந்து வென்று சைவசமயத்தை நிலைநாட்டிய, முருகோனே- தெய்வத்தன்மை யுடையவரே! ஆலம் உடையவர்-(விண்ணவரும் மண்ணவரும் உய்யும் பொருட்டு) ஆலகால விடத்தை உண்டருளியவரும், சோதி அம்கணர்- சோமசூரிய அக்னி என்ற முச்சுடர்களையும், அழகிய கண்களாக வுடையவருமாகிய, பாகம் ஒன்றிய-இடப்பாகத்தில் பொருந்தியிருப்பவரும், வாலை-என்றும் இளமைப் பருவமுடையவரும், அந்தரி-முடிவில் இருப்பவரும், ஆதி அந்தமும் ஆன சங்கரி-முதலும் முடிவுமாக இருப்பவரும் ஆன்மாக்களுக்கு சுகத்தைத் தருபவரும் ஆகிய பார்வதி யம்மையாரது, குமர- குழந்தையாக வந்தவரே! ஈசா-எப்பொருட்குந் தலைவரே! ஆரணம் பயில்- வேதங்களை விரித்துரைக்கும், ஞானபுங்கவ-ஞான பண்டிதரே! சேவல் அம்கொடி ஆன பைங்கர-அழகிய சேவற் கொடியை ஏந்திய அழகு மிக்க திருக்கரத்தையுடையவரே! ஆவினன்குடி வாழ்வு கொண்டு அருள்- திருவாவினன்குடி என்னும் திருத்தலத்தில் வாழ்வு கொண்டு ஆன்மகோடிகளுக்கு அருள் புரிகின்ற, பெருமாளே-பெருமை மிக்கவரே! மூலமந்திரம் ஓதல் இங்கு இலை-மூலமந்திரமாகிய சடக்கர மகாமனுவை (கசிந்து கண்ணீர் மல்கி அடியேன் ஒருநாளும்) ஈண்டு ஜெபிக்கின்றேனில்லை. ஈவது இங்கு இலை-இல்லையென்று இரப்பவர்க்கு இல்லையென்னாது ஈண்டு தருமஞ் செய்கின்றேனில்லை, நேயம் இங்கு இலை-அன்பு என்பதும் ஈண்டு அடியேனிடத்தில் இல்லை.