பக்கம் எண் :


பழநி29

மோனம் இங்கு இலை-மௌனநிலையும் ஈண்டு அடியேன் பெற்றேனில்லை, ஞானம் இங்கு இல்லை-மெய்யறிவும் ஈண்டு பெற்றேனில்லை, (இவைகட்கு எதிர்மாறாக) மடவார்மேல் மோகம் உண்டு-பெண்களிடத்தில் அடியேனுக்கு மிகவும் மோகம் உண்டு. அதிதாகம் உண்டு-அதனால் மிகுந்த காமவிடாயும் உண்டு. அபசாரம் உண்டு-தேவரிடத்திலும் அடியாரிடத்திலும் தீச்செயல் செய்தது உண்டு. அபராதம் உண்டு-அதனால் அடியேனுக்குத் தண்டனையும் உண்டு. இடு மூகன் என்று ஒரு பேரும் உண்டு-(முருகநாமங்களைச் சொல்லாமையால்) ஊமை என்று எனக்கு இட்ட ஒரு பேரும் உண்டு; அருள் பயிலாத கோலமும்-திருவருள் பெறும் நெறியில் பழகாத வடிவமும், குண ஈன துன்பர்கள் வார்மையும்-நற்குணமில்லாத கீழ் மக்களுடைய கூட்டுறவும், பல ஆகி-பற்பல தீக்குணங்களையுடையவனுமாகி, வெந்து எழுகோர கும்பியிலே விழுந்திட நினைவு ஆகி-வெப்பத்துடன் தீ மூண்டு எழுகின்ற பயங்கரமான நரகத்திலே விழுகின்ற எண்ணத்தையுடையவனாகி, கூடு கொண்டு உழல்வேனை-மீண்டும் மீண்டும் உடம்பை எடுத்து (பிறவிக் கடலில் வீழ்ந்து) தடுமாறுகின்ற அடியேனை, அன்பொடு-அடியேன் பேரில் தேவரீர் அன்புகொண்டு, ஞான நெஞ்சினர் பால் இணங்கிடு-மெய்யறிவு நிரம்பிய உள்ளத்தையுடைய பெரியோர்கள்பால், கூடிப்பழகுவதற்குரிய, கூர்மை தந்து இனி ஆளவந்து-அறிவின் நுட்பத்தைத் தந்து இனி ஆட்கொள்ள வந்து, அருள்புரிவாயே-திருவருள் புரியவேணும்.

பொழிப்புரை

கூன் பாண்டியனது கொடிய வெப்பு நோயை நீக்கும் பொருட்டு சமணர்கள் தடவிய பீலி வெந்து நீறாகவும், சிறந்த உயிர் வெதும்பவும், அவர்கள் கரத்திற் பிடித்துள்ள, அசோகத் தழைக்கொத்து வெந்தழியவும், சிவநாமங்களைச் சொல்லாத ஊமைகளைப் போன்ற சமணர்கள் நெஞ்சில் பயத்தை யடையுமாறும், வாதுசெய்து, திருவருட்டுணை கொண்டு, தேவாரப் பாடலுடைய திரு ஏடு வைகையாற்றில் விரும்பி நீரை எதிர்த்துச் செல்லவும், பாண்டியன் வெப்பு நோயும் கூனும் நீங்கி உய்யவும், வஞ்சனையால் திருமடத்திற்குத் தீ வைத்த சமணர்கள் உடலைக் கிழிக்கும் வெவ்விய கழுவில் ஏறவும், திருஞான சம்பந்தராகத் திருவவதாரம் புரிந்து வெற்றி கொண்ட முருகப்பெருமானே! உலகெலாம் உய்யுமாறு ஆலகாலவிடத்தை யுண்டருளியவரும், முச்சுடர்களையும் அழகிய கண்களாக உடையவருமாகிய சிவபெருமானுடைய இடப்புறத்தில் எழுந்தருளியிருப்பவரும், என்றும் இளமையானவரும்,